India

ஸ்டெர்லைட் ஆலையில் 1,000 டன் கந்தக அமிலம் அகற்றும் பணி தொடங்கியது…

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் 1,000 டன் கந்தக அமிலத்தை அகற்றும் பணி தொடங்கியது. அவற்றை டேங்கர் லாரிகள் மூலம் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பல்வேறு கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். கடந்த மாதம் 22-ந் தேதி நடந்த போராட்டத்தின் போது போலீசார் துப்பாக்கி சூடு, தடியடி நடத்தினர். இதில் 13 பேர் பலியானார்கள். இதையடுத்து 28-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலையை, தமிழக அரசு மூடி சீல் வைத்தது.

இதற்கிடையே, ஸ்டெர்லைட் ஆலையில் ரசாயன கசிவு ஏற்படுவதாக மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் வந்தது. இதையடுத்து அதிகாரிகள் குழுவினர் நேற்று முன்தினம் ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு மேற்கொண்டனர்.

ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலம் சேமித்து வைக்கப்பட்டு இருந்த கன்டெய்னரில் சிறிய கசிவு ஏற்பட்டு இருப்பதாகவும், அதை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறியிருந்தார்.

ஆலையின் பிரதான வாசல் சீல் வைக்கப்பட்டு இருப்பதால், இடதுபுறம் உள்ள வாசல் வழியாக அதிகாரிகள் சென்றனர். ஆலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருப்பதால் ஜெனரேட்டர் மூலம் மின்வசதி கொடுக்கப்பட்டது. பின்னர் கன்டெய்னரில் உள்ள கந்தக அமிலத்தை மோட்டார் மூலம் பம்பிங் செய்து டேங்கர் லாரிகளில் ஏற்றும் பணி பாதுகாப்பாக நடந்தது.

இந்த பணி குறித்து கலெக்டர் சந்தீப் நந்தூரி நிருபர்களிடம் கூறியதாவது:-

ஸ்டெர்லைட் ஆலையில் அதிகாரிகள் தலைமையில் கந்தக அமிலத்தை வெளியேற்றும் பணிகள் நடந்து வருகிறது. அங்கு மாசுகட்டுப்பாட்டு வாரியம், தொழிற்சாலைகள் ஆய்வாளர், மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர், வருவாய்த்துறை மற்றும் போலீசார் உள்ளனர். அமிலத்தை 5 டேங்கர் லாரிகள் மூலம் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

ஆலையில் சுமார் 1,000 டன் கந்தக அமிலம் உள்ளது. ஓரிரு நாட்களில் ஆலையில் இருந்து கந்தக அமிலம் முழுமையாக வெளியே கொண்டு செல்லப்படும். அந்த அமிலம் இதுவரை ஸ்டெர்லைட் ஆலையால் கொடுக்கப்பட்டு வந்த நிறுவனங்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

நீதிமன்ற உத்தரவுப்படி தூத்துக்குடி வளர்ச்சி பணிக்காக ஸ்டெர்லைட் ஆலை ரூ.100 கோடி அபராதம் செலுத்தி உள்ளது. தற்போது இந்த தொகைக்கு ரூ.45 கோடி வரை வட்டி வந்து உள்ளது. இதில் சுமார் ரூ.25 கோடி மதிப்பிலான வளர்ச்சி பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top