சீனாவில் 30 அடி உயரத்தில் கம்பிகளுக்கிடையே சிக்கிய குழந்தை கதறி துடித்தது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. சீனாவின் Sichuan மாகாணத்தின் Yibin பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது தளத்தில் உள்ள வீட்டில் இருந்த இரண்டு வயது குழந்தை, கடந்த 30-ஆம் திகதி திடீரென்று அந்த வீட்டில் இருந்த கம்களுக்கிடையே சிக்கி பரிதவித்துள்ளது.
இதைக் கண்ட அருகில் இருந்த வீட்டுக்காரர் குழந்தையை காப்பாற்ற முடியாமல் போராடியுள்ளார். ஏனெனில் அவரால் குழந்தையை தொட முடியவில்லை. அந்த சமயத்தில் குழந்தையின் தாயார் ஷாப்பிங் சென்றிருந்ததால், அப்போது குழந்தை வீட்டின் ஜன்னல் வழியே வந்து இந்த கம்பியில் சிக்கியுள்ளது. இது குறித்த தகவல் உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு முன் ஷாப்பிங் சென்றிருந்த குழந்தையின் தாயாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்ததால், அவர் பொலிசார் வருதற்கு முன்பே வீட்டை திறந்து குழந்தையை பத்திரமாக மீட்டுவிட்டதாக கூறப்படுகிறது. இதில் குழந்தைக்கு பெரிய அளவிலான காயம் இல்லை எனவும், சுமார் 30 அடி உயரத்தில் கழுத்து மட்டும் கம்பிகளுக்கிடையில் சிக்கிக் கொண்டதால், அந்த இடத்தில் மட்டும் சிறிய அளவிலான காயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான காட்சியை அங்கிருக்கும் நபர் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட, அதில் குழந்தை அந்த கம்பியில் சிக்கி துடிக்கும் காட்சி காண்போருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவத்தின் போது குழந்தை கீழே ஏதும் விழுந்துவிடுமோ என்று அந்த குடியிருப்பில் இருந்த சிலர் துணியை கையில் வைத்துக் கொண்டு குழந்தை விழுந்தால் பிடிப்பதற்கு தயாராக இருந்தனர்.