News

அஸ்மினுக்கு எதிராக வழக்கு தொடரப் போவதாக அனந்தி எச்சரிக்கை !!

வடமாகாணசபை உறுப்பினர் அயூப் அஸ்மினுக்கு எதிராக வழக்கு தொடரப்போவதாக அமைச்சர் அனந்தி சசிதரன் கூறியுள்ளார். வடமாகாண சபையில் உள்ள பெண் அமைச்சர் ஒருவர் அரசையும், இராணுவத்தையு ம் விமர்சித்துக் கொண்டு அவர்களிடமே கைத்துப்பாக்கி ஒன்றை பெற்றுள்ளார் என மாகாணசபை உறுப்பினர் அயூப் அஸ்மின் கடந்த மாகாணசபை அமர்வில் கூறியிருந்தார்.

இது தொடர்பாக இன்று அமைச்சர் நடத்தியிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பாக அமைச்சர் மேலும் கூறுகையில், வடக்கு மாகாணத்தில் உள்ள பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பு இப்போது கேள்விக்குறியாக உள்ளது. வடக்கில் உள்ள ஒவ்வொரு பெண்களும் தமது பாதுகாப்பிற்காக துப்பாக்கியை வழங்குமாறும், அதனை பயன்படுத்துவதற்கு அனுமதியை தருமாறு கோரும் அளவிற்குத்தான் பெண்களின் பாதுகாப்பு நிலை உள்ளது.

குறிப்பாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் அஸ்மின் போன்றவர்கள் இங்கிருக்கின்ற நிலையில் துப்பாக்கி பெண்களிடம் இருக்க வேண்டும் என்ற நிலையும் தற்போது தோன்றியுள்ளது. நான் ஆயுதத்தை அறியாதவள் இல்லை. துப்பாக்கி என்னிடம் உள்ளது என்றால் அதை நிரூபிக்க வேண்டும். என்னிடம் எந்த ஆயுதமும் இல்லை.

என்னுடைய கைகளும், வார்த்தைகளும்தான் என்னுடைய ஆயுதமாக உள்ளன.

விசேடமாக அனுமதி பெற்று ஆயுதம் இருக்குமாக இருந்தால் வெளிப்படையாக செல்வதில் பயமில்லை. நான், முதலமைச்சர், சிவாஜிலிங்கம், சித்தார்த்தன், கஜதீபன் போன்றவர்கள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் அடிப்படையில்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு 2 போனஸ் ஆசனங்கள் கிடைத்தது. அந்த போனஸ் ஆசனத்தில் மாகாண சபை உறுப்பினராக வந்த அஸ்மின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விசுவாசத்திற்காக எங்களைப் ஆதாரம் இல்லாத அவதூறுகளையும், வாதந்திகளையும் கட்டவிழ்த்துக் கொண்டிருக்கின்றார்.

இது கண்டிக்கத்தக்க விடயம். என்னிடத்தில் துப்பாக்கி உள்ளது என்று சொல்லியுள்ள அஸ்மின் என்னிடத்தில் இருந்து துப்பாக்கியை எடுத்து காண்பிக்க வேண்டும். அதுதவிர பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கடிதம் வந்திருந்தால் அந்த அனுமதி கடிதம், நான் துப்பாக்கி பெற்றுக் கொண்டதற்கான ஆவணம் இருக்க வேண்டும். அவ்வாறான ஆவணங்கள் இருந்தால் அவர் அதனை வெளிப்படுத்தலாம். என்னுடைய சிறப்புரிமையை அஸ்மின் மீறியது மட்டுமல்லாமல், என்னை ஆயுததாரியாக சித்தரித்திருப்பது தொடர்பில் அவருக்கு எதிரான வழக்கு ஒன்றினை பதிவு செய்ய உள்ளேன். நாளை என்னுடைய சட்டத்தரணிகள் கொழும்பில் இருந்து வருகைதரவுள்ளனர். அவர்களுடன் சட்ட ஆலோசனை பெற்ற பின்னர் அஸ்மினுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன்” என்றார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top