ஆப்கானிஸ்தானில் சாலையோர குண்டுவெடித்து 11 பேர் பலி, 30 பேர் படுகாயம்!

ஆப்கானிஸ்தான் நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள பரா மாகாணத்தில் இன்று சாலையோர குண்டுவெடித்ததில் பேருந்தில் சென்ற 11 பேர் உயிரிழந்தனர். 30 பேர் படுகாயமடைந்தனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹேரட் மாகாணத்தில் இருந்து அந்நாட்டின் தலைநகரான காபுல் நோக்கி இன்று ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது.
நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள ஃப்ரா மாகாணம், பலா பலுக் மாவட்டத்தின் வழியாக வந்தபோது தலிபான் பயங்கரவாதிகள் சாலையோரத்தில் புதைத்து வைத்திருந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டு திடீரென்று வெடித்து சிதறியது.
இந்த தாக்குதலில் பேருந்தில் வந்த 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சுமார் 30 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் இந்த தாக்குதலில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத நடவடிக்கைகளை முறியடிக்கும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்கா தலைமையிலான ‘நேட்டோ’ படைகள் கடந்த 2014-ம் ஆண்டு அங்கிருந்து வெளியேறிய பின்னர் தலிபான்கள் மற்றும் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கம் நாட்டின் பல பகுதிகளில் தலைவிரித்தாடுகிறது.
இந்த ஆண்டில் இதுவரை நடைபெற்ற பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களில் கடந்த 6 மாதங்களில் மட்டும் 1692 பேர் உயிரிழந்துள்ளதாக ஆப்கானிஸ்தானில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை கண்காணிப்பகம் கவலை தெரிவித்துள்ளது.