ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதலில் 10 பேர் பலி!

ஆப்கானிஸ்தான் ராணுவ வாகனத்தின் மீது நிகழ்த்திய தற்கொலைப்படை தாக்குதலில் 10 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டின் ஜலாலாபாத் நகரத்தில் வெடிகுண்டுகளை உடலில் கட்டிக்கொண்டு வந்த ஒருவர், ராணுவ வாகனம் ஒன்றின்மீது நேற்று மோதினார். இதில் குண்டுகள் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறின. இதில் சிக்கி 10 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். அவர்களில் 8 பேர் ஒன்றும் அறியாத அப்பாவி மக்கள் ஆவர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இந்த தற்கொலைப்படை தாக்குதலை நேரில் கண்ட ஒருவர், “குண்டுவெடிப்பை தொடர்ந்து பெரிய தீப்பந்து போல வெளிப்பட்டது. அதைக் கண்டு மக்கள் ஓட்டம் எடுத்தனர்” என்று கூறினார். இந்த தாக்குதலால் அருகில் இருந்த பெட்ரோல் நிலையம் ஒன்று தீப்பிடித்து எரிந்தது. இந்த தாக்குதலுக்கு எந்தவொரு பயங்கரவாத இயக்கமும் பொறுப்பு ஏற்கவில்லை.
ஆப்கானிஸ்தான் அரசுக்கும், தலீபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தை நடக்கும் என்று அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ நேற்று முன்தினம் நம்பிக்கை வெளியிட்டார். ஆனால் மறுநாளான நேற்று இந்த தாக்குதல் நடந்து இருப்பது கவனத்தை ஈர்ப்பதாக அமைந்து உள்ளது.