ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படை வாகனம் மீது தலிபான் தற்கொலைப்படை தாக்குதல்.

ஆப்கானிஸ்தானில் இன்று தேசிய புலனாய்வு முகமை வாகனத்தை குறிவைத்து தலிபான் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் அரசுப் படைகள் மற்றும் போலீசாரை குறிவைத்து தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். விரிவான பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக இருந்தும், அதனைக் கேட்க தலிபான்கள் தயாராக இல்லை.
இந்நிலையில், காபூல் நகரில் இன்று அதிகாலை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் வாகனத்தில் சென்றபோது அவர்களை குறிவைத்து தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 4 பேர் உயிரிழந்ததாகவும், 5 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் காவல்துறை செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
ஆனால், எத்தனை வீரர்கள் உயிரிழந்தனர்? பொதுமக்கள் தரப்பில் உயிர்ப்பலி ஏற்பட்டதா? என்பது பற்றி உறுதியான தகவல் வெளியாகவில்லை. இந்த தாக்குதலுக்கு தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. தாக்குதலில் 10-க்கும் மேற்பட்ட வீரர்கள் இறந்திருப்பதாகவும் கூறியுள்ளது.