ஆளுநருக்கு ஆலோசனை வழங்குமாறு கோரி சபையில் தீர்மானம்.
19 உறுப்பினர்கள் இணைந்து தீர்மானம் நிறைவேற்றம்
வடமாகாண சபைக்கு முழுமையான அமைச்சர்கள் சபையை உருவாக்குவதற்கான ஆலோசனையை ஆளுநருக்கு வழங்கவேண்டும் எனக் கோரி வடமாகாண சபையில் நேற்று தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டது.
முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், வடமாகாண சபையின் அமைச்சர்கள் மற்றும் ரெலோ உறுப்பினர்கள் புறக்கணித்த நேற்றைய அமர்விலேயே இவ்வாறான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழரசுக் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 19 பேர் இணைந்த இத்தீர்மானத்தை நிறைவேற்றினர்.
வடமாகாண சபையின் போக்குவரத்து அமைச்சராகவிருந்த டெனீஸ்வரனின் பதவி நீக்கம் செல்லுபடியற்றது என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்திருந்த நிலையில் இது தொடர்பில் நேற்று விசேட அமர்வு இடம்பெற்றது.
வடமாகாண சபையின் 19 உறுப்பினர்கள் எழுத்துமூலம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய 127ஆவது அமர்வு இடம்பெற்றது. நேற்றுக் காலை 9.45 மணிக்கு அவை முதல்வர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் மாகாணசபை கூடியது. இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் இருப்பதால் விவாதத்தில் கலந்துகொள்ள முடியாமல் இருப்பதாக முதலமைச்சர் எழுத்துமூலம் சபைக்கு அறிவித்திருந்தார்.
முதலமைச்சரின் இந்தக் கடிதத்தை அவைமுதல்வர் சீ.வீ.கே.சிவஞானம் வாசித்தார். இதனைத் தொடர்ந்து டெனீஸ்வரன் முன்னர் அங்கம் வகித்த கட்சியான ரெலோ சார்பில் மாகாண சபை உறுப்பினர் கனகரட்னம் விந்தன் அறிக்கையொன்றை சமர்ப்பித்தார்.
விவாதத்தின் கருப்பொருள் எதுவாக இருந்தாலும் அடிப்படையில் மாகாண சபைகளின் அதிகாரங்களும் ஆளுநர் மற்றும் முதலமைச்சர் தலைமையிலான அமைச்சர்கள் சபையின் அதிகார வரையறைகளும் அதிகார உறவுகளும் அமைந்திருப்பதை எவரும் பரிந்துரைக்க முடியாது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
13வது திருத்தத்தை சகல சாத்தியமான வழிகளிலும் பலவீனப்படுத்தி அர்த்தமற்றதாக ஆக்குவதற்கு தொடர்ச்சியாக நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலுக்குள் ஆளுநர் ரெஜினோல்ட் குரேயும் இருக்கின்றார். இவ்வாறான நிலையில் மக்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கையை பலவீனப்படுத்தும் விதத்தில் எவரும் செயற்படக்கூடாது.
எனவே இந்த விவாதம் தவிர்க்கப்படுவதே உசிதமானது என்றும் ரெலோ கட்சியின் அறிக்கையில் குறிப்பிட்டிருந்ததை விந்தன் சபையில் வாசித்தார். இதனைத் தொடர்ந்து ரெலோவின் ஐந்து உறுப்பினர்களும் சபையிலிருந்து வெளியேறிச் சென்றனர்.
முதலமைச்சர் சபைக்கு வருகை தராத நிலையில் ஏனைய நான்கு அமைச்சர்களும் சபைக்கு வருகை தந்திருக்கவில்லை.
அமைச்சர் சந்தியசீலன் மாத்திரம் சபையில் இருந்தபோதும் ரெலோ உறுப்பினர்கள் வெ ளிநடப்புச் செய்தபோது அவரும் சபையிலிருந்து வெளியேறினார்.
இவர்கள் வெளிநடப்புச் செய்தபோதும் குறித்த விவாதத்தைக் கோரிய தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உள்ளடங்கலான 19 பேர் சபையில் இருந்தனர். எதிர்க்கட்சித் தலைவர் தவராசா விவாதத்தை ஆரம்பித்துவைத்து உரையாற்றினார்.
இதனைத் தொடர்ந்து ஏனைய உறுப்பினர்கள் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.
விவாதத்தின் இறுதியில் தீர்மானமொன்றும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
அரசியலமைப்பின் உறுப்புரை 154 F (5) இனால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அவரது தத்துவத்தை முறையாகப் பயன்படுத்தி வடக்கு மாகாணசபைக்கு ஓர் முழுமையான அமைச்சர்கள் சபையை உருவாக்குவதற்கான ஆலோசனையை எதுவித தாமதமுமின்றி வடக்கு மாகாண ஆளுநருக்கு வழங்க வேண்டுமென்று அத்தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இடைக்காலக் கட்டளை மூலம் எழுந்துள்ள நிலைமையை கருத்திற்கொண்டும் ஜூன் மாதம் 29 ஆம் திகதியிலிருந்து முறைப்படியான அமைச்சர் சபையொன்று வடக்கு மாகாணசபைக்கு முழுமையாக பொறுப்புக் கூறக்கூடிய வகையில் இல்லாத நிலையொன்று தோன்றியுள்ளது. இதனால் உடனடியான அரசியல் அமைப்பு மீறல் ஒன்று ஏற்பட்டு விடலாம் என்ற அச்சம் எழுந்திருப்பதாக அத்தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வடமாகாண நிர்வாகம் முழுமையாக முடங்கக்கூடியதொரு ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளதாலும், மாகாண சபையினது பிரதான கடமையான சட்டவாக்கத் தத்துவத்தை பிரயோகித்து நியதிச்சட்டங்களை ஆக்க முடியாத தேக்கநிலையொன்று உருவாகியிருப்பதாகவும் அத்தீர்மானத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.