ஸ்கோ லுஸ்னிக்கி விளையாட்டரங்கில் இன்று இரவு நடைபெற்ற இறுதிப் போட்டியில் குரோஷியாவை 4 க்கு 2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிகொண்ட பிரான்ஸ் கடந்த 20 வருடங்களில் இரண்டாவது தடவையாக பீபா உலக கிண்ண கால்பந்தாட்ட சம்பியனானது.

1998, 2006 ஆகிய வருடங்களைத் தொடர்ந்து மூன்றாவது தடவையாக உலக கிண்ண இறுதிப் போட்டியில் விளையாடிய பிரான்ஸ், இன்றைய இறுதிப் போட்டியின் ஆரம்பத்தில் சற்று தடுமாற்றத்தை எதிர்கொண்ட அணியாக காணப்பட்டது.

ஆனால் போட்டியின் 18ஆவது நிமிடத்தில் மரியோ மாண்ட்சூக்கிச் போட்டுக்கொடுத்த சொந்த கோல் பிரான்ஸை உற்சாகமடையச் செய்தது.

அந்த சந்தர்ப்பத்தில் பிரான்ஸுக்கு கிடைத்த ப்றீ கிக்கை அன்டொய்ன் க்றீஸ்மான் 30 யார் தூரத்திலிருந்து உதைக்க குரோஷிய வீரர் மரியோ மாண்சூக்கிச் தலையால் பின்னோக்கி தட்டி தனது சொந்த கோலுக்குள்ளேயே பந்தை புகுத்த, பிரான்ஸ் முன்னிலை அடைந்தது.

எனினும் அடுத்த பத்தாவது நிமிடத்தில் கிடைத்த ப்றீ கிக்கை புத்திசாதுரியமாக வலப்புறமாக அணித் தலைவர் லூக்கா மொட்ரிச் உதைக்க அங்கிருந்த வீரர் தலையால் முட்டி பந்தை பெனல்டி எல்லையை நோக்கி நகர்த்தினார். அங்கு மற்றொரு குரோஷிய வீரர் தலையால் தட்டி ஐவன் பெரிசிச்சுக்கு கொடுக்க அவர் இடது காலால் பலமாக உதைத்து கோல் நிலையை சமப்படுத்தினார்.

ஆனால் போட்டியின் 38ஆவது நிமிடத்தில் பெரிசிச் பந்தை கையால் தட்டியமைக்கு பெனல்டி ஒன்றைத் தாரைவார்த்தார்.

பிரான்ஸ் வீரர் அன்டொய்ன் க்றீஸ்மான் எடுத்த கோர்ணர் கிக்கை நோக்கி உயரே தாவிய ஐவன் பெரிசிச்சின் கையில் பட்ட பந்து வெளியே சென்றது. இதனை அடுத்து பிரான்ஸ் வீரர்கள் பெனல்டி கோரினர். தொடர்ந்து வீடியோ மத்தியஸ்தரின் உதிவியை நாடிய பிரதான மத்தியஸ்தர் பிட்டானா நெஸ்டர், பிரான்ஸுக்கு பெனால்டியை வழங்கினார். க்றீஸ்மான் மிக இலகுவாக பந்தை கோலினுள் புகுத்தி பிரான்ஸை மீண்டும் முன்னிலையில் இட்டார்.

இடைவேளையின்போது பிரான்ஸ் 2 க்கு 1 என்ற கோல்கள் அடிப்படையில் முன்னிலை வகித்தது.

இடைவேளையின் பின்னர் சுமார் 15 நிமிடங்கள் வரை குரோஷியா கடுமையாக போராடியபோதிலும் கோல்போடும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. கடைசி 3 போட்டிகளில் தொடர்ச்சியாக மேலதிக நேரத்தில் விளையாடிய குரோஷிய வீரர்களிடம்  உடல்பலம் குன்றி இருந்ததை அவதானிக்க முடிந்தது.

இதனை சாதமாக்கிக்கொண்ட பிரான்ஸ் 6 நிமிட இடைவெளியில் மேலும் இரண்டு கோல்களைப் போட்டது.

போட்டியின் 59ஆவது நிமிடத்தில் போல் பொக்பா அடுத்தடுத்து இரண்டு முயற்சிகளை எடுத்து இரண்டாவது முயற்சியில் பிரான்ஸின் மூன்றாவது கோலைப் போட்டார். வலதுகாலால் உதைத்த பந்து குரோஷிய வீரரின் மேல்பட்டு திரும்பிவந்தபோது பொக்பா இடதுகாலால் உதைத்து இலகுவாக கோல் போட்டார்.

மெலும் ஆறு நிமிடங்கள் கழித்து கிலியான் எம்பாப்பே வெகமாக பந்தை முன்னொக்கி நகர்த்திச் சென்று அலாதியான கோல் ஒன்றைப் போட்டு பிரான்ஸை 4 க்கு 1 என முன்னிலையில் இட்டார்.

போட்டியின் 69ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் கோல் காப்பாளர் ஹியூகொ லோரிஸ் இழைத்த தவறினால் குரோஷியாவுக்கு கோல் ஒன்று கிடைத்தது.

பிரான்ஸின் பின்கள வீரர் பின்னோக்கி பரிமாறிய பந்தை லோரிஸ் தனது பாதத்தால் கட்டுப்படுத்திய அதேவேளை வேமாக ஓடிவந்த மரியோ மாண்ட்சூக்கிச்சுக்கு வித்தைக் காட்டி பந்தை முன்னோக்கி உதைக்க முற்பட்டபோது பந்து மாண்ட்சூக்கிச்சின் வலதுகாலில் பட்டு கோலினுள் புகுந்தது.

எனினும் அதன் பின்னர் பிரான்ஸ் வீரர்கள் அனைவரும் நிதானத்துடனும் கட்டுப்பாட்டுடனும் விளையாடி உலகக் கிண்ணமும் தங்கப் பதக்கமும் தங்களுக்கு கிடைப்பதை உறுதி செய்தனர்.

உலகக் கிண்ண இறுதிச் சுற்றில் அறிமுகமான 20 வருடங்களில் முதல் தடவையாக இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்ற குரோஷியா, வெள்ளிப் பதக்கத்துடன் திருப்தி அடைந்தது.

இதேவேளை, பிரான்ஸ் கோல்காப்பாளருக்கும் குரோஷியா கோல்காப்பாளருக்கும் இடையிலான போட்டியாக இறுதிப் போட்டி அமையும் என எமது இணையத்தில் எதிர்வு கூறியிருந்ததைப் போன்று போட்டி அமைந்தமை குறிப்பிடத்தக்கது.