Business

இராணுவம் வடக்கில் இருக்க வேண்டும் என்றால் நான் கூறியதைச் செய்யுங்கள் : முதலமைச்சர் அதிரடி!!

போர்க்காலம் போல் இப்பொழுதும் அதிகாரங்கள் இருப்பதாக இராணுவத்தினர் நினைப்பது தவறு. உண்மையில் வடமாகாணத்தில் படையினர் தொடர்ந்திருக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்கள் இன்று எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இதை குறிப்பிட்டுள்ளார்.

கேள்வி – முழுமையான அமைச்சரவையை உருவாக்கும் ஆலோசனையை ஆளுநருக்கு வழங்குங்கள் என்று உறுப்பினர்கள் நேற்று தீர்மானம் எடுத்துள்ளார்களே?

முதலமைச்சருக்கு நியமிக்கும் அல்லது பதவி இறக்கும் உரித்தில்லை என்று மேன் முறையீட்டு நீதிமன்றம் கூறியிருக்கும் போது நான் எவ்வாறு ஆலோசனை வழங்குவது? சட்டத்திற்குப் புறம்பாக நடவடிக்கை எடுக்கப் பண்ணி என்னை மாட்டிவிடப் பார்க்கின்றார்களா எமது உறுப்பினர்கள்? ஆளுநர் செய்த பிழையை ஆளுநரே சரி செய்ய வேண்டும். டெனீஸ்வரனை நான் பதவி நீக்கம் செய்ததை அரச வர்த்தமானியில் பிரசுரிக்காத குறையை இப்பொழுதும் நீக்கலாம். அதாவது 2017 ஆகஸ்ட் 20ம் திகதி தொடக்கம் பயன்பாட்டிற்கு வரும் வகையில் இப்பொழுதும் கடந்த காலத்தை அளாவியவிதத்தில் அரச வர்த்தமானியில் பிரசுரம் இடம்பெற ஆளுநர் நடவடிக்கை எடுக்கலாம். அதன் பின் குறித்த வர்த்தமானி அறிவித்தலை உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்துக்காட்டி மேன் முறையீட்டுத் தீர்மானத்தைப் புறம் வைக்கலாம்.

கேள்வி – வடக்கில் இராணுவத்தின் வசம் இருந்த 92 சதவிகிதமான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவம் கூறியுள்ளதே? இது உண்மையா?

புளுகு, அண்டப்புளுகு, புள்ளிவிபரங்கள் என்று கூறுவார்கள் (Lies, Bloody lies and Statistics). அதுபோல் தான் இவ்விடயம் அமைகின்றது. 2013 கடைசியில் வலிகாமம் வடக்கில் சுமார் 6500 ஏக்கர் மக்கள் காணி இராணுவத்தினர் கைவசம் இருந்தது. இப்பொழுது அவற்றில் ½ வாசிமட்டில் கொஞ்சம் கொஞ்சமாக கையளித்துள்ளார்கள். அதை 92 சதவிகிதம் என்று கூறுவது தாங்கள் 2009ல் கைவசம் வைத்திருந்த காணிகளின் விகிதாசார அடிப்படையில் தற்போது 8 சதவிகிதமே மிகுதி உள்ளதென்பதையே அவர்கள் கூறுகின்றார்கள். இது யாழ் மாவட்டத்தில் வலிகாமம் வடக்கில் மட்டுமே.

நாம் பதவியேற்ற போது 65000 ஏக்கர் காணிகளை வடமாகாணம் முழுவதிலும் படையினர் கையகப்படுத்தி வைத்திருந்தார்கள். அவற்றுள் பெரும்பான்மை அரச காணிகள். அவற்றைப் பற்றி எதுவும் கூறாமல் 92 சதவிகிதம் கையளித்துவிட்டதாக கூறுவதன் அர்த்தம் அரச காணிகளைத் தாம் தான் தோன்றித்தனமாய் ஆயிரம் வருடங்களுக்கு தொடர்ந்து வைத்திருக்கலாம் என்ற எண்ணத்தில். சுமார் 60000 ஏக்கர் வடமாகாணக் காணிகள் இப்பொழுதும் படையினர் வசம் இருக்கின்றன என்பதே எமக்குத் தரப்பட்ட ஏற்றுக் கொள்ளக்கூடிய புள்ளி விபரங்கள்.

கேள்வி – படையினர் முதலமைச்சரிடம் அனுமதி கேட்டு வைத்தியசாலைகளில் புள்ளிவிபரங்கள் கேட்க வேண்டிய அவசியமில்லை என்று இராணுவத்தினர் கூறுகின்றார்களே?

இன்னமும் அவசரகால நிலைமை நீடிப்பதாக படையினர் நினைக்கின்றார்கள். அவசரகாலச்சட்டம் இல்லாத தற்காலத்தில் எந்த ஒரு அரச நிறுவனத்தில் சென்று விபரங்கள் சேகரிப்பதென்றாலும் அவை அந் நிறுவனங்களின் தலைமை அதிகாரியின் அனுமதியுடனேயே நடைபெற வேண்டும். தம்பாட்டுக்குப் போய் பாதுகாப்பு என்ற அடிப்படையில் எதுவும் கேட்க முடியாது. அதற்கு சட்டம் இடம்கொடுக்காது. பாதுகாப்பு என்ற போர்வையில் பலவிதமான அட்டூழியங்களைப் படையினர் இது காறும் புரிந்துள்ளார்கள். போர்க்குற்றங்கள் அவற்றுள் அடங்குகின்றன. எனவே இவ்வாறான தருணங்களில் பாதுகாப்பு படையினரின் முறையற்ற நடவடிக்கைகளை மக்களுக்கு எடுத்துரைப்பது அவசியம்.

அத்துடன் போர் முடிந்து 9 வருடங்கள் நிறைவடைந்த பின் பாதுகாப்பு, பாதுகாப்பு என்று பயமுறுத்தும் படையினர் அந்த பாதுகாப்புக்கான காரணங்கள் என்ன என்பதை எங்களுடன் பேசி முடிவுக்குவர வேண்டும். வெளிநாடுகளிடமிருந்து எமக்கு பாதுகாப்புத் தேவைப்படுகிறதா? உள்நாட்டில் தேவைப்படுகின்றதா? என்பதை அவர்கள் கூற வேண்டும். வெளிநாடுகளைக் குறிப்பிட்டு தேசிய பாதுகாப்பைப் பற்றிக் கூறுவது ஒன்று. தேசிய பாதுகாப்பு வேண்டுமெனில் அதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் சும்மா பாதுகாப்பு பாதுகாப்பென்று மக்களின் காணிகளைப் பிடித்துக் கொண்டும் வருவாயை எடுத்துக் கொண்டிருப்பதை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

அத்துடன் இவர்கள் தாம் நினைத்தவாறு வைத்தியசாலையினுள் நுழைந்து தரவுகள் சேகரித்தால் பொலிசாரின் அதிகாரங்களை படையினர் கைவசப்படுத்தியதாக அமையும். உண்மையில் இராணுவத்தினர் இவ்வாறான புள்ளி விபரங்களை வைத்தியசாலைகளில் இருந்து சேகரிக்க வேண்டுமென்றால் பொலிசாரை நாடி அவர்கள் ஊடாகவே இதைச் செய்ய வேண்டும். இராணுவத்தினருக்குப் போர்க்காலம் போல் இப்பொழுதும் அதிகாரங்கள் இருப்பதாக நினைப்பது தவறு. உண்மையில் வடமாகாணத்தில் படையினர் தொடர்ந்திருக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை. அரசியல் காரணங்களே அவர்களை இங்கு நிலை நிறுத்தியுள்ளன.

கேள்வி – வடக்கில் சாதாரண மக்களையும் இராணுவத்தினரையும் பிரிக்க நீங்கள் எத்தனிப்பதாக இராணுவத் தளபதி மகேஷ் சேனநாயக கூறியுள்ளாரே? அதுபற்றி?

மகேஷ் எனது நண்பர். அவர் கூறுவது அந்த வரையில் உண்மை. எமது மக்களும் இராணுவத்தினரும் நெருக்கமாக இருப்பதை நான் விரும்பவில்லை. காரணம் அந்த நெருக்கத்தைக் காட்டி இராணுவம் இன்னும் 1000 வருடங்களுக்கு எமது பிரதேசங்களில் இருந்து வ ரஎத்தனிக்கும். அதனால் பாதிப்படையப் போவது எமது இனமே. இராணுவத்தின் வேலை வடமாகாணத்தில் முடிவடைந்த படியால் அவர்கள் திரும்ப கொழும்பு செல்வதே முறையானது. அப்படி இராணுவம் தரித்து நிற்கவேண்டு மென்றால் நான் ஏற்கனவே கூறியுள்ளேன் ‘இராணுவத்தை ஒன்பதாகப் பிரியுங்கள்! ஒன்பதில் ஒருபங்கை வேண்டுமெனில் ஒவ்வொரு மாகாணத்திலும் நிறுத்துங்கள்’ என்று சலுகைகளையும் சல்லியையும் தந்து இராணுவம் இங்கு நிலை பெற நினைப்பது அவர்கள் எம்மைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காகவே.

எங்கள் மீது கரிசனை இருப்பதால் அல்ல. இவற்றை எம் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். பெரும்பான்மையினரின் அரசியலுக்கு எமது சாதாரண மக்களின் வறுமையைப் பாவித்து இராணுவத்தினர் உதவ வருவது சரிபோல் தெரியும். வருங்காலத்தில் பாதிக்கப்படப் போவது எமது இன மக்களே. படைகளில் சிலருக்கு தெற்கில் ஒரு குடும்பம் வடக்கில் ஒரு குடும்பம் இருப்பது நாடறிந்த உண்மை. அடுத்து அரசாங்க திணைக்களங்கள் தகவல்கள் இராணுவத்தினருக்கு வழங்குவது பற்றியும் நண்பர் கூறியிருந்தார். அது பற்றி ஏற்கனவே பதில் கூறியுள்ளேன். இராணுவத்தினர் தமது பணிகளை நிறுத்தப்போவதில்லை என்றும் கூறியுள்ளார். இராணுவத்தளபதி. அதை நாம் எதிர்பார்ப்பதுதான்.

தருணம் வரும் வரையில் தான் இவ்வாறான கருத்துக்கள் தங்கி வாழமுடியும். தருணம் வந்ததும் விட்டு போக வேண்டியிருக்கும். உதாரணத்திற்கு IPKFஐ வாபஸ் பெறவேண்டியிருந்தது கௌரவ V.P.சிங் டெல்கியில் பிரதமர் ஆகியதால். இங்கிருந்து நாம் எப்பொழுதும் திரும்ப மாட்டோம் என்ற கூற்றுடன் தான் IPKF படையினர் வந்தார்கள். ஆகவே தருணங்கள் எப்போது வருவன என்று எம்மால் கூறமுடியாது. மக்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் எதனையும் நாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.

கேள்வி – விஜயகலா சம்பந்தமாக பொலிஸ் வந்து உங்களைச் சந்தித்தார்களா?

ஆம். திட்டமிட்ட குற்றங்கள் தடுப்புப் பிரிவு வந்தார்கள். விஜயகலா பேசிய கூட்டத்தில் நானும் பங்கேற்ற படியால் என்னிடம் சில கேள்விகள் கேட்டார்கள். அமைச்சர்கள் வஜிரஅபேவர்த்தன, திலக் மாரப்பன போன்றவர்களிடம் வாக்குமூலம் பெற்றதாகக் கூறினார்கள். விஜயகலாவின் பேச்சில் இடம் பெற்ற சில கேள்விக்கிடமான பகுதிகளைப் பற்றி எனது கருத்தைக் கேட்டார்கள். அந்த நாளும் வந்திடாதோ என்று ஒருவர் அங்கலாய்ப்பது குற்றமாகாது என்று கூறினேன்.

புலிகள் திரும்பவும் வரவேண்டும் என்று நாங்கள் பாடுபடுகின்றோம் என்றுஅவர் கூறியது இந்தப் பாதுகாப்புச் சூழலையே அன்றி வன்முறைகளை மீண்டும் தொடக்கும் நோக்குடன் அவர் கூறவில்லை என்று கூறித் தனது கட்சிக்கு விசுவாசமாகவே இது காறும் அவர் நடந்து வந்துள்ளார் அதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றேன். அவருக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் அது எமது பேச்சுச் சுதந்திரத்தைப் பாதிப்பதாகும். என வடமாகாண முதலமைச்சர் தனது பதில்களை தெரிவித்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top