ஒன்பது மாகாணங்களும் சுயாட்சியை அரசிடமிருந்து கேட்டுப் பெறவேண்டும்.

மாகாண சுயாட்சியை எல்லா மாகாணங்களும் மத்திய அரசாங்கத்திடமிருந்து கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தினார்.
சமஷ்டி முறையிலான அரசியலமைப்பு பிரிவினைக்கு வழிகோலும் என்ற தப்பான அபிப்பிராயம் சிங்கள மக்கள் மத்தியில் பரப்பப்படுவதாலேயே அதிகாரப் பகிர்வு இன்னமும் கிடைக்கவில்லை. இதனால்தான் ஒன்பது மாகாணங்களும் சுயாட்சியைக் கோரவேண்டும் என்றும், வேண்டிய இரு மாகாணங்கள் தமக்குள் இணைய வழிவகுக்கப்பட வேண்டும் என்ற பிரசாரத்தை சிங்களவர்கள் மத்தியில் தான் பரப்பி வருவதாகவும் கூறினார்.
கிளிநொச்சி மாவட்ட மாற்றுவலுவுள்ளோர் சங்கத்திற்காக நிர்மாணிக்கப்பட்ட புதிய அலுவலகக் கட்டடத்திறப்புவிழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்க்கவே இலங்கை இந்திய ஒப்பந்தம், 13வது திருத்தச் சட்டத்திற்கு வழி வகுத்தது. அதனை முழு நாட்டுக்கும் ஏற்புடைத்தாக்கினார். அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன. அதேபோல் மாகாண சுயாட்சியை எல்லா மாகாணங்களும் கேட்டுப்பெற வேண்டும் என்ற கருத்தைப் பரப்பி வருகின்றேன் என்றார். எமது அரசியல் தலைவர்களின் நிபந்தனையற்ற ஆதரவுகளைத் தமக்குச் சாதகமாகப்பயன்படுத்தி கடந்த மூன்று வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகளும் நல்லாட்சி அரசாங்கத்தினால் தமிழ் மக்களின் பிரதிநிதிகளின் ஒத்திசைவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால் அதில் தமிழ் மக்களுக்குக் குறிப்பிடத்தக்க நன்மைகள் கிடைக்கக்கூடிய ஒதுக்கீடுகளோ அல்லது திட்டங்களோ உள்வாங்கப்படவில்லை. இதனைப் பகிரங்கமாக எடுத்துக் கூறினாலோ அல்லது அது பற்றி இடித்துரைத்தாலோ அரசு எம்மைப் பயங்கொண்டு பார்க்கின்றது எனவும் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கம் எம்மைக் கோபித்துக் கொள்ளும் என்பதற்காக நம்பி வாக்களித்த மக்களின் தேவையை அரசுக்கு எடுத்துக் கூறாது இன்முகங்காட்டி வரவேற்று உபசரிக்க முடியாது. இதனால்தான் இன்முகம் காட்டி வரவேற்கும் அதேநேரம் அரச தலைவர் முன்னிலையிலோ, அமைச்சர்கள் முன்னிலையிலோ மக்களின் பிரச்சினைகளையும் தேவைகளையும் தான் இடித்துரைக்கப் பின்நிற்பதில்லையென்றும் தெரிவித்தார்.
பாதிப்புக்களுக்கு உள்ளாகாத ஏனைய மாகாணங்களுக்கு வழங்குகின்ற முறையிலேயே 30 வருடங்களுக்கு மேல் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட எமது வடபகுதிக்கும் நிதிப் பங்கீடுகளை அரசாங்கம் மேற்கொண்டுவருகின்றனர். இம் முறை தவறானதென்றும் பாதிப்புக்குள்ளான எமக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யும்படியும் கோரினால் அதனை எமக்குத் தராது, வடமாகாணசபை வடக்கை அபிவிருத்தி செய்யவில்லை என்று எம்மீது குறைகூறுகின்றார்கள் அல்லது தராத நிதி திரும்பிவிட்டதாக விசமப் பிரசாரம் மேற்கொள்கின்றார்கள்.
பாதிப்படைந்த பிரதேசத்தை முன்னேற்றுவதற்காக எங்கள் புலம்பெயர்ந்த உறவுகளிடம் இருந்து உதவிகளைப் பெற்று எமது பிரதேசத்தின் அபிவிருத்தியை மேற்கொள்ளலாம் என்ற நோக்கில் எம்மால் ஆக்கப்பட்ட முதலமைச்சர் நிதிய நியதிச்சட்டத்தை நான்கு வருடங்களாக அங்கீகாரம் வழங்காது தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் இழுத்தடிப்புச் செய்கின்றன. வெளியில் இருந்து வரும் நிதிகள் அனைத்தும் மத்திக்கூடாகக் கொண்டு வர வேண்டும் என்பது தேவையற்ற ஒரு செயற்பாடு. முதலமைச்சர் நிதியமும் நாட்டின் கணக்காளர் நாயகத்தின் கட்டுப்பாடு மற்றும் மேற்பார்வையிலேயே நடைமுறைப்படுத்தப்படும். இதனால்த்தான் ஒரு இன ரீதியான சிந்தனை மத்திய அரசாங்கத்தை இவ்வாறான தவறுகளைச் செய்ய வைக்கின்றதோ என்று சிந்திக்க வைக்கின்றது. இந்த மாகாணத்தை முன்னேற்றுவதற்கு நாங்கள் எடுக்கின்ற முயற்சிகளுக்கு மத்தியஅரசு முட்டுக்கட்டைகளையும் தடைகளையும் ஏற்படுத்தி வருகின்ற போதும் நாம் அவற்றையெல்லாம் தகர்த்தெறிந்து முன்நோக்கிச் செல்வதற்கு முடிந்தவரை முயற்சிக்கின்றோம். எமது அரசியல் முன்னெடுப்புக்களுக்கு அனைவரும் உங்கள் பூரண ஒத்துழைப்புக்களை வழங்க முன்வரவேண்டும் என்றும் கோரிக்கைவிடுத்தார்.