கனடாவை உலுக்கிய தீ விபத்து… உடல் கருகி பலியான குடும்பம்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

கனடாவின் Port Colborne நகரில் 2 வயது சிறுவன் உள்ளிட்ட 4 பேர் கொண்ட குடும்பம் தீவிபத்தில் பலியான வழக்கில், அந்த குடியிருப்பின் உரிமையாளருக்கு 100,000 டொலர் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. Port Colbrone நகரில் கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இங்குள்ள Nickle தெருவில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் Tammy Burd மற்றும் அவரது இரண்டு பிள்ளைகள் மற்றும் இவர்கள் பாட்டி என நான்கு பேர் வாடகைக்கு குடியிருந்துள்ளனர்.
சம்பவத்தன்று நள்ளிரவு 1.20 மணியளவில் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவல் அறிந்து விரைந்து சென்ற மீட்பு குழுவினர், குறித்த குடியிருப்பானது கொழுந்து விட்டெரிவதை கண்டுள்ளனர். சுமார் 10 அடி உயரத்திற்கு நெருப்பு கொழுந்துவிட்டெரிந்ததாக அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர். இதனிடையே கடும் போராட்டத்திற்கு பின்னர் நெருப்பை கட்டுக்குள் கொண்டுவந்த தீயணைப்பு குழுவினர், ஒரு நாள் முழுக்க தேடிய பின்னர் உடல் கருகிய நிலையில் 2 வயது சிறுவன் உள்ளிட்ட 4 பேரின் உடலை மீட்டுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், வாடகைக்கு விடப்பட்டுள்ள குடியிருப்பை முறையாக பராமரிக்க தவறிய குற்றத்திற்காக, அந்த குடியிருப்பின் உரிமையாளரை குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது. மேலும் 100,000 டொலர் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மட்டுமின்றி இந்த விவகாரம் கனடாவின் எஞ்சிய குடியிருப்பு உரிமையாளர்களுக்கு ஒரு பாடமாக அமையும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.