கனடா பிரிட்டிஷ் கொலம்பியாவில் காட்டுத்தீ: வீடுகளை விட்டு வெளியேற தயார் நிலையில் மக்கள்!!
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் வசிக்கும் மக்கள், காட்டுத்தீ பரவி வருவதால் அச்சத்தில் ஆழ்ந்துள்ளதோடு தங்கள் வீடுகளை விட்டு வெளியேற தயார் நிலையில் இருக்கிறார்கள். Okanagan பகுதியில் சுமார் ஏழு இடங்களில் காட்டுத்தீ பரவி வருவதால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.
அப்பகுதியில் அமைந்துள்ள 2000த்துக்கும் அதிகமான வீடுகளில் வசிப்போருக்கு வீடுகளை விட்டு வெளியேறுவதற்கான எச்சரிக்கை விடுகப்பட்டுள்ளது, அதாவது நிலைமை மோசமானதும் அவர்கள் தங்கள் வீடுகளை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும். இந்நிலையில் summerland பகுதியில் அமைந்துள்ள பெரிய திராட்சைத் தோட்டங்களை மீட்கும் நடவடிக்கைகளில் தீயணைப்பு வீரர்கள் இறங்கியுள்ளனர்.
அவர்கள் ஏரிகளிலிருந்து நீரை ஹெலிகொப்டர்கள் மூலம் மொண்டு திராட்சைத் தோட்டங்களின் ஓரங்களில் தெளித்து வருகிறார்கள். வீடுகள் இருக்கும் பகுதிகளை காட்டுத்தீ நெருங்கி வருவதால் மக்கள் வீடுகளை நீர் தெளிப்பான்கள் மூலம் நனைத்து வருகிறார்கள். இதற்கிடையில் காட்டுத்தீயானது வீடுகளுக்கு மின்சாரம் வழங்கும் பல மின் கம்பங்கள் மற்றும் மின் கம்பிகளை நாசம் செய்து விட்டதால் பல இடங்கள் இருளில் மூழ்கியுள்ளன. மக்களுடன் தீயணைப்பு வீரர்களும் மழை வருமா, காற்று குறையுமா என வானிலை மாற்றங்களை கவனித்துக் கொண்டு காத்திருக்கிறார்கள்.