கலிபோர்னியா காட்டுத்தீயில் கொள்ளுப் பேரக்குழந்தைகளுடன் மூதாட்டி பலி!

கலிபோர்னியா காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்த மூதாட்டி மற்றும் அவரது 2 பேரக்குழந்தைகளின் உடல்கள் இன்று மீட்கப்பட்டுள்ளது, இதனால், காட்டுத்தீயில் பலியானவர்களின் எண்ணிக்கை 5-ஆக அதிகரித்துள்ளது. மேலும், 17 பேரை காணவில்லை என்பதுடன் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் ரெட்டிங் என்ற பகுதியில் கடந்த 26-ம் தேதி பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டு அருகாமையில் இருந்த அடுத்தடுத்த பகுதிகளுக்கு பரவியது. இதனால் அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களது வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் இருந்து தப்பி வேறு பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர்.
காட்டுத்தீ ஏற்பட்ட பகுதியில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வரும் மீட்பு பணியின்போது 2 தீயணைப்பு வீரர்கள் உள்பட மூவர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், காட்டுத்தீ ஏற்பட்ட பகுதியில் இருந்த வீடு ஒன்றில் தனது 2 பேரக்குழந்தைகளுடன் தீயில் கருகி உயிரிழந்த மூதாட்டியின் சடலம் இன்று கைப்பற்றப்பட்டுள்ளது.
இதனால், கலிபோர்னியா காட்டுத்தீயில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 5-ஆக அதிகரித்துள்ளது.
காற்று வேகமாக வீசுவதால், நெருப்பு சூறாவளி உருவாகி மரங்களை வேரோடு சாய்வதாகவும் வாகனங்கள் அடித்து செல்லப்படுவதாகவும் தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை ஐந்து சதவீத பகுதியில் பரவியுள்ள இந்த தீயைக் கட்டுப்படுத்த ஆயிரக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் போராடி வருகிறார்கள். கடந்த திங்கள்கிழமை ஆரம்பமாகிய இந்த காட்டுத்தீ 48 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பரவியுள்ளது. எதிர்வரும் வாரத்தில் வறண்ட காலநிலை நிலவும் என்பதால் தீப்பரவல் இன்னும் மோசமாகக்கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.