கால்பந்தாட்டத்தின் காலிறுதி போட்டியில் வெற்றி பெற்றதனை தொடர்ந்து, ஸ்பெயின் தெருக்களில் அதனை கொண்டாடிய பிரித்தானிய ரசிகர்கள் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தும் வீடியோ காட்சிகள் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளன. ரஸ்யாவின் Samara Arena மைதானத்தில், இங்கிலாந்து – சுவீடன் அணிகளுக்கு இடையேயான கால்பந்து காலிறுதிபோட்டி நேற்று நடைபெற்றது.
இதில் இங்கிலாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் சுவீடன் அணியை வீழ்த்தியது. 28 வருடங்களுக்கு பிறகு முதன்முறையாக உலகக்கோப்பை அரையிறுதி போட்டிக்கு இங்கிலாந்து அணி முன்னேறியிருப்பதை கொண்டாடும் விதமாக, இங்கிலாந்து ரசிகர்கள் பலரும் தங்களது மகிழ்ச்சியினை கொண்டாட்டங்களின் வாயிலாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், இங்கிலாந்து ரசிகர்கள், ஸ்பெயின் தெருக்களில் போட்டியின் வெற்றியினை கொண்டாடியபோது, ஒரு கட்டத்தில் எல்லை மீறும் வகையில் செயல்பட்டதால், கூட்டத்தை கலைக்கும் விதத்தில் ஆயுதமேந்திய பொலிஸார் குவிக்கப்பட்டனர்.
அப்பொழுது ஒரு நபர் தனது குழந்தையை தோளில் சுமந்தபடி தெருவில் நடந்து சென்றார். முதலில் அங்கிருந்து செல்லுமாறு பொலிஸார் அறிவுறுத்தினார். ஆனால் பொலிஸாரின் உத்தரவையும் மீறி நடக்க முயன்றதால், அவர் மீது தடியடி நடத்தினார்.
இதனை பார்த்த மூன்று இங்கிலாந்து ரசிகர்கள் உடனடியாக சம்மந்தப்பட்ட பொலிசாரை சுற்று வளைத்தனர். இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்படவே, ரப்பர் குண்டுகளை வைத்து பொலிஸார் தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர்.