கிரீஸில் போராடி அணைக்கப்பட்டது காட்டுத்தீ – 80 பேர் உயிரிழப்பு, மாயமானவர்களை தேடும் பணி தீவிரம்

ஏதென்ஸ் காட்டுத்தீயின் உக்கிரத்திற்கு 80 பேர் உயிரிழந்துள்ளனர், மாயமானவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கிரீஸ் தலைநகர் ஏதென்ஸின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் அமைந்திருக்கும் பைன் மரக்காடுகளில் திங்கள் கிழமை மிகப்பெரிய காட்டுத் தீ ஏற்பட்டது. தீ மளமளவென காட்டுப் பகுதிகளை ஒட்டியுள்ள சுற்றுலாப் பகுதிகள் வரையில் பரவியது. சுற்றுலாப் பகுதிகள், குடியிருப்பு பகுதிகள், கார்கள் தீ பிடித்து எரிந்தது. சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள கடலுக்குள் குதித்தனர்.
தீ விபத்து சம்பவத்தில் 80 பேர் உயிரிழந்து உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 100-க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது, எனவே உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என தெரிவிக்கப்படுகிறது.
காட்டுப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தினால் பெரும் நாசம் ஏற்பட்டுள்ளது. கிரீஸ் அரசு போராடி தீயை அணைத்துள்ளது. பெரும்பாலான பகுதிகள் சாம்பலாக காணப்படுகிறது.
இப்போது மாயமானவர்களை தேடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. உயிரை காப்பாற்றிக்கொள்ள கடலுக்குள் குதித்தவர்கள், தப்பி ஓட முயற்சித்தவர்களின் நிலை என்னவென்று தெரியவரவில்லை. அவர்களை தேடும் பணியில் அந்நாட்டு கடலோர காவல்படை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. படகுகள் மூலம் மீட்பு பணிகள் நடைபெறுகிறது. 1500க்கும் அதிகமான வீடுகள் சேதம் அடைந்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது. கிரீஸ் நாட்டில் 2007-ம் ஆண்டு மிகப்பெரிய தீ விபத்து நேரிட்டது, அப்போது 70 பேர் உயிரிழந்தனர். இப்போது மீண்டும் பயங்கரமான சம்பவம் நடைபெற்றுள்ளது. இப்போது காட்டுப்பகுதியில் சட்டவிரோத செயல்பாடே தீ விபத்துக்கு காரணம் என கூறும் கிரீஸ் அமெரிக்காவிடம் இருந்து கண்காணிப்பு கேமராக்கள் அடங்கிய ட்ரோன்கள் வாங்கப்படும் என தெரிவித்துள்ளது