News

கிரேக்கத்தில் கட்டியணைத்தபடி உடல்கருகிய நிலையில் 26 சடலங்கள்: ஒரே குடியிருப்பில் இருந்து மீட்க்கப்பட்ட துயரம் !!

கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகர் அருகில் உள்ள அட்டிகா பிராந்தியத்தில் நேற்று மாலை திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. கடற்கரையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் இரண்டு இடங்களில் பற்றிய தீ, மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவத் தொடங்கியது. இதனால் அப்பகுதி முழுவதும் கடும் புகைமூட்டமாக காட்சியளிக்கிறது.

தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்குள்ள பீச் பகுதியில் உள்ளவர்கள், ரிசார்ட்டுகளில் தங்கியிருந்தவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வேறு இடங்களுக்கு தப்பி ஓடினர்.

எனினும் பலர் தீயில் சிக்கிக்கொண்டனர். விபத்து நிகழ்ந்த பகுதியை ஒட்டியுள்ள சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் கருகி சேதமடைந்துள்ளது. வனப்பகுதி வழியாக கார்களில் சென்ற பயணிகளும் தீயில் சிக்கிக்கொண்டர்.

கிரேக்கத்தில் கொழுந்துவிட்டெரியும் காட்டுத்தீயில் சிக்கிய குடியிருப்பு ஒன்றில் இருந்து கட்டியணைத்தபடி உடல் கருகிய நிலையில் 26 சடலங்களை செஞ்சிலுவை சங்க அதிகாரிகள் மீட்டுள்ளனர். கிரேக்கத்தின் Mati பகுதியில் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த செஞ்சிலுவை சங்க அதிகாரிகள் இந்த கோர சம்பவத்தை வெளியிட்டுள்ளனர். ஏதென்ஸ் அருகே உள்ள கடற்கரை பகுதியில் இருந்து துவங்கிய இந்த பெருந்தீயானது இதுவரை 60 உயிர்களை பலிவாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுமார் 156 பேர் படுகாயங்களுடன் மீட்க்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. Mati பகுதியில் கண்டெடுக்கப்பட்ட உடல்கள் ஒரே குடும்பத்தினராக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். கொழுந்துவிட்டெரிந்த தீயில் மொத்தமாக நாசமான அந்த கிராமத்தில் உள்ள குடியிருப்பு ஒன்றில் இருந்தே 26 உடல்களையும் மீட்டுள்ளனர்.

 

 

கடற்கரையில் இருந்து சுமார் 30 மீற்றர்கள் தொலைவே இருந்துள்ளது அந்த குடியிருப்புக்கு. தப்பிக்க பல முயற்சிகளும் மேற்கொண்டிருக்கலாம் ஆனால் காலம் கடந்துவிட்டதால் இந்த அதிர்ச்சி முடிவை அவர்கள் எடுத்திருக்கலாம் என அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். கடற்கரையில் ஏதேனும் சுற்றுலாப்பயணிகள் சிக்குண்டார்களா என மீட்பு குழுவினர் படகுகளுடன் தேடி வருகின்றனர்.

 

 

சுற்றுலாப்பயணிகள் பலர் பயத்தில் கடலுக்குள் குதித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு உள்ளனர். Mati பகுதியானது தீயில் சிக்குவது இது முதன் முறையல்ல. கடந்த 2007 ஆம் ஆண்டு ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி ஏராளமான பொதுமக்கள் மரணமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top