News

கையெழுத்திடும் மைத்திரி! 19 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றம்?

நாட்டில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் அதிகரிப்பதை கட்டுப்படுத்துவதற்காக மரணதண்டனையை நிறைவேற்றவேண்டிய தேவையுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

இதன்படி, போதைப்பொருள் தொடர்பான பாரிய குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ள 19 பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றி போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர், “19 பேரும் இனம்காணப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது குறித்த ஆவணத்தில் ஜனாதிபதி கைச்சாத்திடவுள்ளார்.

இவர்களில், இரண்டு தடவைக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்தவர்கள் மற்றும் பாரியளவிலான போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்குவதற்கு முன்னுரிமை வழங்கப்படும்.

தெரிவு செய்யப்பட்ட சில குற்றவாளிகளிற்கு மரணதண்டனையை நிறைவேற்றுவதை சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கண்டிக்கப்போவதில்லை” என அவர் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை, போதைப்பொருள் வியாபாரத்துடன், தொடர்புடைய சிறைக்கைதிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு கையெழுத்திடவுள்ளதாக ஜனாதிபதி இன்று கூறியுள்ளார்.

இவ்வாறான நிலையிலேயே அமைச்சர் ராஜித சேனாரட்ன மேற்கண்டவாறு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும், மரணதண்டனையை நிறைவேற்றும் திட்டத்தை இலங்கை அரசாங்கம் கைவிடவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top