சாலையில் குழந்தை பெற்றெடுத்த தாய்: அடுத்து நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம் !

கனடாவில் மருத்துவமனைக்கு புறப்படும் வழியில் சாலையிலேயே ஒரு பெண் குழந்தை பெற்றெடுக்க, அடுத்து நிகழ்ந்த சம்பவம் தலைப்புச் செய்தியாகியுள்ளது. Ann-Kathryne Lassègueக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டபோது அவர் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை, ஏனென்றால் அவருக்கு பிரசவத்திற்காக கொடுக்கப்பட்ட திகதிக்கு இன்னும் சில வாரங்கள் இருந்தன, அதோடு அவருக்கு போலி பிரசவ வலியும் ஏற்படுவதுண்டு.
ஆனால் சிறிது நேரத்தில் வலி அதிகரிக்கவே அவர் தனது கணவரை உதவிக்கு அழைத்திருக்கிறார். இருவரும் சேர்ந்து மருத்துவமனைக்கு புறப்பட்ட சிறிது நேரத்தில் திடீரென Ann வயிற்றிலிருந்த குழந்தை தானாகவே நழுவி கீழே விழுந்து விட்டது. அதிர்ந்து போன Annஇன் கணவரான George Philippe Jean, சட்டென குழந்தையை வாரியெடுத்திருக்கிறார். அதற்குள் Ann மயங்கி விழுந்து விட்டார். மயங்கி விழுந்த மனைவி ஒரு புறம், இதைப் பார்த்து பயந்து அலறும் அவரது இரண்டு வயதுள்ள மூத்த மகள் இன்னொரு புறம், கையில் குழந்தை என George தடுமாறி நின்றபோதுதான் அந்த சம்பவம் நடைபெற்றது.
சில வீடுகள் தள்ளி வசித்த Solange Habyalimanaவின் குழந்தைகள் ஓடி வந்து தங்கள் தாயிடம் அந்த வீட்டில் ஏதோ குழப்பம், அந்த பெண் அலறிக்கொண்டிருக்கிறார் அன்று கூற போட்டது போட்டபடி அவர் ஓடிச் சென்று அழுது கொண்டிருந்த சிறுமியை தன் பக்கம் அழைத்து அவளைத் தேற்றத் தொடங்கியிருக்கிறார். அதற்குள் இன்னொரு பக்கத்து வீட்டுக்காரரான Michel Hivon ஓடி வந்து ஆம்புலன்ஸை அழைத்ததோடு அக்கம் பக்கத்தவர்களை அழைத்து அவர்களால் ஏதாவது உதவ முடியுமா என்று கேட்டிருக்கிறார்.
அவர்களில் ஒருவர் வழியில் நின்று கொண்டிருந்த காரை அகற்றி ஆம்புலன்ஸ் வருவதற்கு வழி ஏற்படுத்தி கொடுக்க சிலர் Annஐயும் அவரது மூத்த மகளையும் கவனித்து கொண்டிருக்கிறார்கள். மருத்துவ உதவிக் குழுவினரின் வழி காட்டல்களின்படி ஒருவர் தொப்புள் கொடியை கட்ட, அனைவருமாக இணைந்து தாய் மற்றும் குழந்தையை பாதுகாப்பாக உணரச் செய்திருக்கிறார்கள். அதற்குள் ஆம்புலன்ஸ் வர தாயும் சேயும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள்.
ஒரு வாரத்திற்குப் பின், George-Alix Jean என்னும் தங்கள் அழகான ஆண் குழந்தையை கையில் ஏந்தியிருக்கும் அந்த பெற்றோர், எப்படி அந்த பகுதியிலுள்ள அனைவரும் உதவிக்கு ஓடோடி வந்தார்கள் என்பதை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். எங்களுக்குள் இருந்த ஒரே பொதுவான விடயம், நாங்கள் எல்லோரும் ஒரே தெருவில் வசிக்கிறோம் என்பதுதான், ஆனால் அந்த ஒரு நிமிடத்தில் நாங்கள் எல்லோரும் ஒரு குடும்பமாக உணர்ந்தோம் என்கிறார்கள் அவர்கள்.
அன்று அங்கு யாரும் புலம் பெயர்தலைப் பற்றியோ, நீ எந்த நாட்டைச் சேர்ந்தவன் என்றோ, நீ கருப்பா வெள்ளையா என்பது பற்றியோ யோசிக்கவில்லை, ஒரு மனிதன் இன்னொருவனை தன் சக மனிதனாகப் பார்த்தது மட்டுமே அன்று நிகழ்ந்தது என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் குழந்தையின் தந்தையான George Philippe Jean.