சுவிட்சர்லாந்தில் விபத்துக்குள்ளான சுற்றுலா விமானம்: 4 பேர் பலி !!

சுவிட்சர்லாந்தின் வாலெய்ஸ் மாகாணத்தில் சிறிய ரக சுற்றுலா விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் விமானி உள்ளிட்ட 4 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வாலெய்ஸ் மாகாணத்தில் பனிப்பாறை ஒன்றில் மோதியே குறித்த விமானம் விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றன. இதில் 54 வயது விமானியும் அவரது 21 வயது மகனும், டென்மார்க்கை சேர்ந்த 59 வயது பெண்மணியும் அவரது 20 வயது மகனும் கொல்லப்பட்டுள்ளனர்.
நான்கு பேர் செல்லத்தக்க இந்த விமானமானது வெள்ளியன்று மாலையில் புறப்பட்டு சென்றதாக வாலெய்ஸ் மாகாண பொலிசார் உறுதி செய்துள்ளனர். இந்த நிலையில் கட்டுப்பாட்டை இழந்த விமானம் பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளானதும், மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஹெலிகொப்டரில் சூரிச் மாகாணத்தில் இருந்து மீட்பு குழுவினர் விரைந்துள்ளனர். விமானம் விபத்துக்குள்ளானதன் காரணம் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. இதனிடையே வாலெய்ஸ் மாகாண பொலிசாரும், சுவிஸ் போக்குவரத்து பாதுகாப்பு விசாரணை வாரியமும் விபத்து நடந்த பகுதியில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.