News

சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தி தேசிய பிரச்சினையை தீர்க்க ​வேண்டும்!

நீண்டகாலமாக தொடரும் தேசிய பிரச்சினைக்கு தீர்வினை எட்டும்முகமாக தற்போது நிலவும் சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை இலங்கை வந்துள்ள பெல்ஜிய பாராளுமன்ற குழுவினருக்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை வந்துள்ள பெல்ஜியம்- – இலங்கை பாராளுமன்ற நட்புறவு குழுவினருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் இடையிலான கட்டடத்தொகுதியிலுள்ள எதிர்க்கட்சி தலைவரின் காரியாலயத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பின் போதே எதிர்க்கட்சித்தலைவர் இவ்வாறு வலியுறுத்தினார்.

காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பில் மக்கள் பலமாதங்களாக தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபட்டுவருகிறார்கள் என்றும் இந்தவிடயங்கள் தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் எமது எதிர்பார்ப்புக்களை பூர்த்திசெய்யும் வண்ணம் இல்லை எனவும் அவர் பெல்ஜிய பாராளுமன்ற குழுவினருக்கு சுட்டிக் காட்டியுள்ளார்.

தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து குழுவினரை தெளிவுபடுத்திய இரா. சம்பந்தன், நாட்டில் தற்போது காணப்படும் அரசியல் யாப்பானது எல்லோரினதும் இணக்கப்பாட்டுடன் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றல்ல என்பதனை சுட்டிக்காட்டிய அதேவேளை நாட்டின் பன்முகத் தன்மையையும் பல இனங்களையும் அங்கீகரிக்கும் ஒரு புதிய அரசியல் யாப்பு உருவாக்கத்திற்கான முயற்சிகள் இடம்பெற்று வரைபு யாப்பானது புதன்கிழமையன்று வழிநடத்தல் குழுவிற்கு சமர்ப்பிக்கப்படவுள்ளதனையும் எடுத்துக்காட்டினார். மேலும் இந்தமுயற்சிகள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதனையும் நீண்டகாலமாக தொடரும் தேசிய பிரச்சினைக்கு தீர்வினை எட்டும்முகமாக நிலவும் சூழ்நிலைமையை சாதகமாக பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தினையும் தமிழ்தேசியகூட்டமைப்பின் தலைவர் வலியுறுத்திக் கூறினார்.

இந்தநாட்டினை ஒருபுதிய பாதையில் கொண்டுசெல்லும் நோக்கில் புதியஅரசியல்யாப்பானது இவ்வருட இறுதிக்குள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திய சம்பந்தன் , இந்நாட்டினை முன்னேற்றமான பாதையில் இட்டுசெல்வதா? அல்லது மீண்டும் பின்னோக்கி நகர்த்துவதா? என்பதே இன்றுள்ள தெரிவுகளாகும், நாட்டினை முன்னேற்றமான ஒருபாதையில் இட்டுசெல்லவேண்டுமானால் ஒருபுதிய அரசியல் யாப்பினை நிறைவேற்றுவது இன்றியமையாததாகும் என்றும் வலியுறுத்தினார்.

நல்லிணக்க முயற்சிகள் தொடர்பில் கருத்துதெரிவித்த இரா.சம்பந்தன் ,

தமது பிரச்சினைகளுக்கு தாம் எதிர்பார்த்த உடனடி நிவாரணங்கள் கிடைக்காமையால் மக்கள் விரக்தி அடைந்திருப்பதனையும், விசேடமாக மக்கள் பரம்பரை பரம்பரையாக நூற்றாண்டு காலம் வாழ்ந்த நிலங்களை ஆயுதபடையினர் கைவசப்படுத்தி வைத்துள்ளதனையும் இவற்றினை விடுவிப்பது தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் மிக மந்தகதியில் இடம்பெறுவதனையும் எடுத்துக் கூறினார்.

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் குழுவினரை தெளிவுபடுத்திய இரா. சம்பந்தன், இவர்களின் உறவினர்கள் தொடர்ந்தும் தங்கள் அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் ஒருநிலையற்ற நிர்க்கதி நிலைமையில் இருக்க முடியாது என்பதனையும் உண்மை கண்டறியப்பட வேண்டும் என்பதனையும் வலியுறுத்தினார்.

அதேவேளை எமது மக்கள் பலமாதங்களாக இந்த விடயங்கள் தொடர்பில் தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபட்டுவருகிறார்கள் என்றும் இந்தவிடயங்கள் தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் எமது எதிர்பார்ப்புக்களை பூர்த்திசெய்யும் வண்ணம் இல்லை எனவும் எடுத்துக்கூறினார். கடந்தகாலங்களில் இலங்கை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பங்களிப்புகளுக்கு நன்றி தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் நாட்டுமக்களுக்கு பாதக விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கைகளை சீர்செய்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரசாங்கத்தினை வலியுறுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top