தஞ்சம் கோருபவர்களின் செலவுகளுக்கு 200 மில்லியன் டொலர் நிதி கோரிக்கை!

அமெரிக்காவில் இருந்து தஞ்சம் கோருபவர்களின் செலவுகளை ஈடு செய்வதற்கு ஒன்றாரியோ அரசாங்கம் மத்திய அரசிடம் 200 மில்லியன் டொலர்களை கோரியுள்ளது. ஒன்றாரியோவின் குழந்தைகள், சமூகம் மற்றும் சமூக சேவைகள் அமைச்சர் லிசா மெக்லோட், நேற்று கடிதம் மூலம் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார். மேலும், “சட்டவிரோத எல்லை கடத்துதல்” பிரச்சினையை நிர்வகிப்பதில் மத்திய அரசாங்கத்தின் முயற்சிகள் குறித்து அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
தஞ்சம் கோருபவர்களின் அதிகரிப்பு காரணமாக நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடி நிலைமைகளை பூர்த்தி செய்யப் போதுமான அளவில் நிதி இல்லையென அவர் கூறியுள்ளார். இந்நிலையில் அவர் கோரியுள்ள 200 மில்லியன் டொலர்களில் 74 மில்லியன் டொலர்கள் ரொறன்ரோ நகரத்தின் தங்குமிடம் செலவுகளுக்கும், 12 மில்லியன் ஒட்டாவா நகரம் தங்குமிட செலவுகளுக்கும், 90 மில்லியன் சமூக உதவி செலவுகளுக்காகவும், கல்விக்கு 20 மில்லியன் மற்றும் செஞ்சிலுவைக்கு 3 மில்லியன் டொலர்களும் ஒதுக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வரை மத்திய அரசாங்கம், கியூபெக்கிற்கு 36 மில்லியனும் மானிடோபாவிற்கு 3 மில்லியனும் ஒன்றாரியோவிற்கு 11 மில்லியன் டொலர்களுமாக மொத்தமாக 50 மில்லியன்கள் டொலர்களை மாத்திரமே மாகாணங்களுக்கு வழங்கியுள்ளதாக அவர் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.