India

தந்தையை முறையாக கவனிக்கத் தவறினால் மகனிடம் சொத்தை திரும்பப் பெறலாம்: மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: மகன் முறையாக கவனிக்கத் தவறினால் சொத்தை திரும்பப் பெறலாம் என்று மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகன் முறையாக கவனிக்கத் தவறினால் தங்கள் மகனுக்கு கொடுத்த சொத்தை திரும்பப் பெற உரிமை உண்டு என்று மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஒரு முதியவரின் மனைவி கடந்த 2014-ம் ஆண்டு உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் அவர் மறுமணம் செய்ய விரும்பியதாகவும் அப்போது மகன் மற்றும் மறுமகளின் நிர்ப்பந்தத்தின் பேரில் தனது குடியிருப்பில் 50 சதவீதத்தை சொந்த மகனுக்கு எழுதிக்கொடுத்துள்ளார்.

இதனை தொடர்ந்து அவரது மகன் அவரையும் அவரது இரண்டாவது மனைவியையும் தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இது தொடர்பாக மும்பை உயர்நீதிமன்றத்தில் முதியவர் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, முதியவர்கள் பாதுகாப்புச் சட்டத்தை சுட்டிக்காட்டி மகன் முறையாகக் கவனிக்கத் தவறினால் கொடுத்த சொத்தை திரும்பப்பெற உரிமையுண்டு என தீர்ப்பளித்தார். மேலும் மகனுக்கு முதியவர் எழுதிக்கொடுத்த பத்திரத்தை ரத்து செய்தும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பெற்றோரை கவனிக்காத பிள்ளைகளுக்கு 3 மாதம் சிறை

“பெற்றோரை சரிவர கவனிக்காத பிள்ளைகளுக்கு 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும்”, என்று அமைச்சர் சரோஜா கூறினார்.

முதியோர் மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு, அன்றாட வாழ்க்கைக்கு தேவைப்படும் உபகரணங்களை வழங்கும் ‘ராஷ்டிரிய வயோஸ்ரீ யோஜனா’ திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை ராயபுரத்தில் நேற்று நடந்தது.

விழாவில் சிறப்பு விருந்தினராக சமூக நலத்துறை அமைச்சர் வி.சரோஜா பங்கேற்றார். 440 பயனாளிகளுக்கு, ரூ.15 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விழாவில் அமைச்சர் சரோஜா பேசியதாவது:-

இளைய சமுதாயத்தினர் தங்கள் பெற்றோர் மற்றும் உறவினர்களை அன்போடும், பரிவோடும் கவனித்துக்கொள்ள வேண்டும். இது உங்கள் தலையாய கடமையாகும். பிள்ளைகளால் அவதிப்படும் முதியோருக்காகவே அரசு சட்டம் இயற்றியுள்ளது.

இதன்படி சிரமத்திற்குள்ளாகும் முதியோர், மாவட்ட வருவாய் அதிகாரிகளிடம் புகார் அளித்தால் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும். பெற்றோரை சரிவர கவனிக்காத பிள்ளைகளுக்கு 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் எம்.பி.க்கள் டாக்டர் ஜெ.ஜெயவர்தன், எஸ்.ஆர்.விஜயகுமார், டி.ஜி.வெங்கடேஷ்பாபு, எம்.எல்.ஏ.க்கள் ஆர்.நடராஜ், விருகை வி.என்.ரவி, கலெக்டர் வெ.அன்புச்செல்வன், வருவாய் அதிகாரி சு.கருணாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top