News

தாய்லாந்து குகைக்குள் சிக்கிய அனைவரும் பத்திரமாக மீட்பு- சாதித்து காட்டிய கடற்படைக்கு குவியும் பாராட்டுக்கள்….

தாய்லாந்து குகைக்குள் சிக்கியிருந்த 12 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளர் என அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த மீட்பு பணியை கச்சிதமாக செய்து முடித்த கடற்படை வீரர்களை பலரும் பாராட்டி உள்ளனர். இச்சம்பவம் உலகின் பல பாகங்களிலும் இருந்து உற்று நோக்கிக் கொண்டிருந்த பல மில்லியன் பேருக்கும் பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு பயிற்சி செஷனுக்குப்பின் அந்த 11 முதல் 16 வயதுடைய சிறுவர்களும் அவர்களது 25 வயதுடைய பயிற்சியாளரும் அந்த குகைக்குள் சென்றார்கள். திடீரென ஏற்பட்ட மழை வெள்ளத்தால் அவர்கள் பாதுகாப்பாக இருப்பதற்காக மேலும் குகையின் உள் பகுதிக்கு சென்றபோது வெள்ளம் அதிகரிக்க அங்கேயே சிக்கிக் கொண்டார்கள். இந்த செய்தி வெளியானதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீட்புக் குழுவினர் அவர்களை மீட்கும் நடவடிக்கையில் இறங்கினர்.

ஜூலை 2ஆம் திகதி அதாவது ஒன்பது நாட்களுக்குப் பிறகு, பிரித்தானிய ஆழ் கடல் நீச்சல் வீரர்கள் பசியுற்று சோர்வடைந்திருந்த கால் பந்தாட்டக் குழுவினரை கண்டுபிடித்த செய்தி தாய்லாந்தையே மகிழ்ச்சியில் திணறடித்தது. அவர்களை மீட்க நான்கு மாதங்கள் வரை ஆகும் என்று கூறப்பட்ட நிலையில் அவர்களுக்கு உணவும் பிற தேவையான பொருட்களும் கொண்டு செல்லப்பட்டதோடு ஒரு மருத்துவரும் குகைக்குள் சென்றார்.

ஒரு மீட்புக் குழு வீரரின் மரணம் ஏற்பட்ட நிலையிலும் தொடர்ந்து எப்படியாவது அவர்களை மீட்டே தீருவது என கங்கணம் கட்டிக் கொண்டனர் மீட்புக் குழுவினர். ஒரு பிரம்மாண்ட மீட்புப் பணி ஆரம்பமாயிற்று, ஞாயிற்றுக்கிழமை நான்கு சிறுவர்கள் மீட்கப்பட்டார்கள். திங்கட்கிழமை நான்குபேர்,இந்நிலையில், இன்று மூன்றாவது கட்ட மீட்பு பணியின்போது மீதமுள்ள 4 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளர் ஒவ்வொருவராக மீட்கப்பட்டு குகைக்கு வெளியே அழைத்து வரப்பட்டனர். பின்னர் அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அனைவரும் மீட்கப்பட்டுவிட்டதாக தாய்லாந்து கடற்படை தனது பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளது. கடும் சவால்களைக் கடந்து அனைவரையும் மீட்ட கடற்படை வீரர்களை பலரும் பாராட்டி உள்ளனர்.

பிரித்தானிய பிரதமர் தெரசா மே மீட்கப்பட்டவர்கள் குறித்து மகிழ்ச்சி தெரிவித்து ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மீட்புக் குழுவினர் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதத்தில் ”இது ஒரு அற்புதமா, விஞ்ஞானமா அல்லது என்ன என்று தெரியவில்லை, 13 Wild Boarகளும் குகையிலிருந்து மீட்கப்பட்டாயிற்று” என பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top