News

தாய்லாந்து குகையில் சிக்கித்தவித்த மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வீடியோ

தாய்லாந்து குகையில் சிக்கித்தவித்த மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வீடியோ காட்சிகள் முதன் முறையாக வெளியானது.

தாய்லாந்தின் சியாங் ராய் பகுதியில் உள்ள தாம் லுவாங் குகையை பார்வையிடச் சென்ற 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் கால்பந்து பயிற்சியாளர் கடந்த மாதம் 23-ம் தேதி குகைக்குள் சிக்கிக்கொண்டனர். 9 நாட்களுக்குப் பிறகு அவர்கள் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, மீட்பு பணி தொடங்கப்பட்டது.

கடும் சவால்களுக்கு மத்தியில் மூன்று கட்டங்களாக நடந்த மீட்பு பணியில் குகையில் சிக்கியிருந்த 12 மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர் உள்பட 13 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த சிறுவர்கள் தற்போது அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளனர். தொற்று நோய் ஏற்படாதவாறு காப்பதற்காக அவர்களை தனிமைப்படுத்தி வைத்து சிகிச்சை அளிக்கின்றனர்.

இந்நிலையில், அவர்கள் சிகிச்சை பெறும் வீடியோ காட்சிகள் முதன் முறையாக வெளியாகியுள்ளது. சிறுவர்கள் கட்டிலில் படுத்திருக்ப்பதை அவர்களின் உறவினர்கள் கண்ணாடி தடுப்புக்கு வெளியே இருந்து பார்த்து கண்ணீர் விடும் நெகிழ்ச்சியான காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளது

அவர்கள் 17 நாட்கள் குகைக்குள் வாழ்வா, சாவா போராட்டத்தில் வெள்ளத்திலும், சேற்றிலும் சிக்கித்தவித்த நிலையில், இப்போது புத்தெழுச்சியும், முழுமையான ஆரோக்கியமும் பெறுவதற்கான சிகிச்சைகள் தரப்படுகின்றன.

இதற்கிடையே மீட்பு திட்டத்தின் தலைவர் நாரோங்சாக், சியாங் ராய் நகரில் நேற்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர், “சிறுவர்களை நாங்கள் ஹீரோக்களாக பார்க்கவில்லை. அவர்கள் குழந்தைகள். அவர்களை குழந்தைகளாகத்தான் பார்க்கிறோம். நடந்த சம்பவம் விபத்துத்தான்” என கூறினார்.

இந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது, மீட்கப்பட்ட சிறுவர்களின் முதல் வீடியோ வெளியிடப்பட்டது. சிறுவர்களில் சிலர் அறுவை சிகிச்சைக்கான முகமூடிகளை அணிந்து கொண்டு படுக்கையில் படுத்தும், சிலர் படுக்கையில் உட்கார்ந்து கொண்டு கையசைத்தவாறும் காணப்படுகின்றனர்.

அவர்களது நிலை குறித்து ஏற்கனவே ஒரு சுகாதார அதிகாரி ஒருவர் கூறும்போது, “ஒவ்வொருவரும் சராசரியாக 2 கிலோ எடை குறைந்து உள்ளனர். ஆனாலும் நல்ல உடல் நலத்துடன் உள்ளனர். மன அழுத்தத்துடன் இல்லை” என்று குறிப்பிட்டார்.

இந்த சிறுவர்கள் இன்னும் 10 நாட்கள் ஆஸ்பத்திரியில் இருக்க வேண்டும் என்றும், அதன்பின்னர் வீட்டில் இருந்து 30 நாட்கள் சிகிச்சை பெற வேண்டும் என்றும் அவர்கள் அனுமதிக்கப்பட்டு உள்ள ஆஸ்பத்திரியின் இயக்குனர் சாய்வெட்ச் தனபைசால் கூறினார்.

முதலில் மீட்கப்பட்ட 8 சிறுவர்களின் பெற்றோர் மட்டும் பாதுகாப்பு கவச உடைகள் அணிந்து கொண்டு, அவர்களை 7 அடி தொலைவுக்கு அப்பால் இருந்து பார்ப்பதற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

மீட்கப்பட்ட சிறுவர்கள் முழு ஆரோக்கியம் அடைவதற்கு தேவையான கால அவகாசத்தை நாம் தர வேண்டும் என்று தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓச்சா கூறினார்.

Latest News

To Top