தீர்வை நோக்கிய பயணத்துக்கு ஒத்துழையுங்கள்! – மஹிந்த, கோட்டாவிடம் சம்பந்தன் வலியுறுத்து!

“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷவும் பல நெருக்கடியான விடயங்கள் தொடர்பாக நீண்ட நேரம் என்னுடன் கலந்துரையாடினர். அரசியல் ரீதியான அடுத்தகட்டச் செயற்பாடுகள் தொடர்பாகவும், வடக்கின் நிலைமைகள், அங்கு முன்னெடுப்பதற்கு இருந்த செயற்பாடுகள் ஏன் இப்போது தடைப்பட்டுள்ளன என்பது தொடர்பான விடயங்களை அவர்கள் என்னிடம் முன்வைத்தனர்.”
– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
சீன மக்கள் இராணுவத்தின் 91ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு சீனத் தூதரகம் நேற்றுமுன்தினம் கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் கலந்துகொண்டார். அதில் மஹிந்த ராஜபக்ஷவும், கோட்டாபய ராஜபக்ஷவும் கலந்துகொண்டிருந்தனர். அதன்போதே அவர்கள் இரா.சம்பந்தனுடன் கலந்துரையாடியுள்ளனர்.
தாம் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தம்முடன் இணைந்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல ஆதரவளிக்க வேண்டும் என்றும், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முன்வர வேண்டும் எனவும், தாம் தமிழ் மக்களின் உரிமைகளை, ஜனநாயகத்தை பறிக்கும் நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனவும் மஹிந்த ராஜபக்ஷ இந்தச் சந்திப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.
தனது ஆட்சியின் போது சீனாவிடம் அதிக கடன்களை பெற்று , நாட்டை கடன் சுமைக்குள் தள்ளி விட்டதாக, தற்போதைய ஆட்சியாளர்களுடன் இணைந்து சம்பந்தன் குற்றம்சாட்டுகின்றார். ஆனால், வடக்கு, கிழக்கை அபிவிருத்தி செய்யவே அதிக கடனைப் பெற்றேன், இப்போது அந்த அபிவிருத்தியும் தடைப்பட்டு விட்டது. அதைச் சுட்டிக்காட்ட தவறிவிட்டீர்கள் என்று நேரடியாக இரா. சம்பந்தனிடம் சுட்டிக்காட்டியதாக மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
நாம் அதிகாரத்துக்கு வந்ததும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை எங்களுடன் பேசித் தீர்க்க தமிழர் தரப்பு முன்வர வேண்டும். எங்களுடன் இணைந்து கூட்டமைப்பு செயற்பட வேண்டும். வடக்கு, கிழக்கை அபிவிருத்தி செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாமல், தமிழ் மக்களைத் தவறான பாதைக்கு கொண்டு சென்றால், உங்கள் மத்தியில் வேறு புதிய அரசியல் சக்திகள் உருவாகும் ஆபத்து ஏற்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பு ஊடகம் ஒன்றுக்குக் கருத்துத் தெரிவித்துள்ள மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவரையும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவையும் அருகருகே அமர்த்திப் பேசி இணக்கப்படான சூழலுக்கு வரும் வாய்கை ஏற்படுத்தினேன் என்று கூறியுள்ளார்.
“எமக்கு நீண்டகால பிரச்சினை ஒன்று உள்ளது என்பதை நான் வலியுறுத்தினேன். எமக்கு அரசமைப்பு ரீதியான தீர்வு ஒன்று வேண்டும் என்று கூறினேன். தீர்வுகளை நோக்கிய பயணத்தை முன்னெடுக்கும் புதிய அரசமைப்பு விடயங்களில் அவர்களின் முழுமையான பங்களிப்பை நான் அவர்களிடம் கேட்டுக்கொண்டேன். வேறு பல காரணிகளைப் பற்றியும் நாம் கலந்துரையாடினோம்” என்று இந்தச் சந்திப்புத் தொடர்பாக இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.