News

துப்பாக்கிக்கு விளக்கமளித்த அனந்தி ; சபையில் அமளிதுமளி

வடக்கு மாகாண சபையின் 128 ஆவது அமர்வில் வடமாகாண மகளிர் விவகாரம் மற்றும் சமூக சேவைகள் அமைச்சர் அனந்தி சசிதரனிடம் கைத்துப்பாக்கி உள்ளமை தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டபோது சபையில் பெரும் அமளிதுமளி ஏற்பட்டுள்ளது.

வடக்கு மாகாண சபையின் 128 ஆவது அமர்வு கைதடியில் உள்ள பேரவை செயலகத்தில் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. இதன்போது கடந்த வடக்கு மாகாண சபையின் விசேட அமர்வில் மாகாண சபை அமைச்சர் அனந்த சசிதரனிடம் கைத்துப்பாக்கி உள்ளமை தொடர்பில் மாகாண சபை உறுப்பினர் அஸ்மின் தெரிவித்த கருத்துத் தொடர்பில் அமைச்சர் அனந்தி சசிதரன் தன்னிலை விளக்கத்தினை சபையில் பிரஸ்தாபித்திருந்தார்.

இதன்போதே ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்குள் பல சர்ச்சையான கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டதுடன் அவைத் தலைவரினால் ஒலிவாங்கி நிறுத்தப்பட்டு சபை சபையாக நடக்க வேண்டும் என்று அறிவுறுத்தியதைத் தொடர்ந்து குறித்த விவாதங்கள் நடைபெற்றது.

அனந்தி சசிதரனின் தன்னிலை விளக்கத்தின்போது,

கடந்த மாகாண சபையினுடைய விசேட அமர்வு நடைபெற்றது. அந்த அமர்வுக்கு நான் வருகை தரமுடியாத சூழலில் அஸ்மின் இந்த இடத்தில் நான் பாதுகாப்பு அனுமதி பெற்று துப்பாக்கியை பெற்றிருப்பதாக ஒரு உண்மைக்குப் புறம்பான கருத்தைத் தெரிவித்திருந்தார்.

உண்மையில் நான் கையில் ஆயுதத்தை வைத்திருப்பவளாக இருந்தால் அல்லது இந்த ஆயுதம் தொடர்பான சான்றிதழ் சம்பந்தமான முழுமையான ஆதாரங்களையும் இந்த இடத்தில் அவர் சமர்ப்பித்திருக்கவேண்டும்.

இந்த விடயம் தொடர்பில் நான் வடமாகாண மகளிர் விவகார அமைச்சராக கடமையின்போது வடக்கிற்கு அப்பால் செய்கின்ற போது ஏனைய மக்களும் சரி இனத்துவேசம் கொண்ட மக்களும் சரி என்னை அச்சுறுத்துகின்ற தாக்குகின்ற உயிர் ஆபத்துக்களை எனக்கும் எனது பிள்ளைகளுக்கும் ஏற்படுத்துகின்ற விதமான கருத்தாகவே இதனைப் பார்க்கவேண்டும். எனவே இந்த சபையை பிழையாக வழிநடத்தியது மட்டுமன்றி எனக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்ற விடயமாகவே இதனைக் கருதி இதனை சபை கண்டிக்க வேண்டும்.

எனது அரசியல் பிரவேசம் நான் விரும்பிப் பெற்றுக்கொண்டது அல்ல பாதிப்படைந்த மக்கள் பிரதிநிதியாக அதிகபடியான வாக்குகளைப் பெற்று வடக்கு மாகாணத்தின் பெண் அமைச்சராக முதலமைச்சர் தந்தமையினால் ஒரு வரலாற்றுப் பதிவாக போரால் பாதிக்கப்பட்ட பெண்ணாக இந்த இடத்தில் இருக்கின்றேன்.

எதிர்வரும் தேர்தலை இலக்காகக் கொண்டு தங்களுடைய கால்புணர்ச்சிக்கு என்னைப் பலிக்கடாவாக்க நினைப்பது வருத்ததிற்குரியது இது மட்டுமன்றி தியாகி திலீபனின் உண்ணாவிரத காலத்தில் இருந்தே போராட்டங்களில் பங்கு பற்றியுள்ளேன். இன்றுவரை அது ஓயவில்லை இதுவரை நியாயத்துக்கான போராட்டடாக இருந்தது. இந்த விடுதலைப் போராட்டத்தில் இரண்டு சகோதரர்களை இழந்துள்ளேன். நான் இலங்கை அரசாங்கத்தை எதிர்க்கின்றேன் என்றால் என்னுடைய பாதிப்பும் மக்களுடைய பாதிப்புத்தான் காரணம்.

அரசாங்க உத்தியோகத்தராக இருந்தபோது 1995 ஆம் ஆண்டு இலங்கைக்கு பாப்பரசர் வருகை தந்தபோது நானும் 7 அரசாங்க உத்தியோகத்தர்களும் கொழும்பு சென்றிருந்தபோது மூன்று நாட்கள் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டேன் 1996 ஆம் ஆண்டு சூரிய கதிர் நடவடிக்கையின் போது இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு மூன்று நாட்கள் கடும் சித்திரவதைக்குட்பட்டேன் இத்தகைய விடையங்கள் சிலருக்குத் தெரியாமல் இருக்கலாம்.

இந்த அரசாங்கத்தினால் தொடர்ச்சியான அச்சுறுதலுக்கு உள்ளாகியவர் என்ற வகையில் இந்த நாட்டின்மக்கள் தங்களுடைய பாதுகாப்பிற்காகக அரசிடம் ஆயுதத்தை அல்லது பாதுகாப்பை கேட்கின்ற நிலையிலேயே ஒட்டுமொத்த மக்களும் இருக்கின்றார்கள். இத்தகைய நிலையில் பெண்கள் சிறுவர்களுக்கு வன்முறைகள் அதிகரித்திருக்கின்ற நிலையிலும் இவர் போன்ற உறுப்பினர்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக ஆயுதத்தை கேட்கவேண்டும்.

இதேவேளை மாகாண சபை உறுப்பினர் அஸ்மின்,

எனக்கும் சிறப்புரிமை பிரச்சினை எழுப்பப்பட்டிருக்கின்றது. சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் எனக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரு பொய்யை உண்மையாக்குவதற்கு உண்மையை பொய்யாக்குவதற்கு நீண்ட விவாதப் பிரதிவாதங்கள் தேவை. என்னிடம் அனந்தி சசிதரன் துப்பாக்கி வேண்டும் என்று கேட்டதனுடைய ஆவணம் என்னிடம் உள்ளது. எங்களுடைய ஒழுங்கின் படி பாதுகாப்பிற்கு உறுப்பினர்கள் துப்பாக்கியை பெற்றுக்கொள்ளலாம் என்பது சட்டரீதியானது. பிரதம செயலாளரிடம் இது தொடர்பில் ஆலோசனை பெறப்பட்டுள்ளது. பிரதமர் செயலாளருக்கு ஊடாக இது நடந்துவிட்டால் இப்போது ஏற்படுகின்ற சூழல் ஏற்பட்டுவிடும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரகாரம் எனக்கு இரு வாரம் கேட்டுள்ளார்கள். அனந்தி சசிசதரனுடைய வழக்கம்பராய், பண்ணாகம், சுழிபுரம் என்கின்ற முகவரிக்கு ஒரு கைத் துப்பாக்கி கெடுக்கப்பட்டுள்ளது.

நாங்கள் இவ்வாறான விடங்களை போலியான பொய்யாக முன்வைக்கவிலை. எங்களுக்குக் கிடைத்த அடிப்படை ஆதரங்களோடு பேசுகின்றோம். இதில் விடயம் என்னவெனில் 16 திகதி இடம்பெற்ற விசேட அமர்வின்போது நான் ஏன் இதனைக் குறிப்பிட்டேன் என்றால் வடமாகாண முதலமைச்சர் நீதிமன்றத்திற்கு முரணமாக ஒரு சிலவிடயங்களைக் கையாள்கின்றார். மக்ளுடைய இறைமை கேள்விக்குள்ளாக்கப்படுகின்றது என்றும் ஒவ்வொரு அமைச்சர்களும் மக்கள் நலன் சார்ந்து செயற்படுவதற்கு பதிலாக தங்களுடைய சொந்த நலனில் அக்கறை காட்டுகின்றார்கள். என்று அதனை எடுத்தாள முற்பட்டமையால் தான் அதற்குரிய ஒரு உதாரணமாக இவ்விடத்தை எடுத்துக் கூறினேன். இதற்குள் என்னும் பழைய விடயங்கள் இருக்கின்றன.

2013 ஆம் ஆண்டு மாகாணசபை தேர்தலின்போது பெண் உறுப்பினரின் வீடு ஏன் தாக்கப்பட்டது. யாழ். பிராந்தியப் பத்திரிகை போல் வேறு ஒரு பத்திரிகை ஏன் பிரசுரிக்கப்பட்டது. இதற்கெல்லாம் தொடர் காரணங்கள் உண்டு. மக்களின் அப்பாவித்தனத்தை பயன்படுத்தி பலரும் பலதை செய்கிறார்கள். எங்களுடைய எதிரிகள் எங்களுக்குள்ளேயே முகவர்களை அமைத்து எங்களுடைய பலத்தை சிதைவடைய செய்கின்றார்கள். இவ்வாறான பல விடஙய்களை வெளிப்படுத்த வேண்டிய தேவையுள்ளது. பொருத்தமான சந்தர்ப்பத்தில் அதனை வெளிப்படுத்துவேன் என்றார்.

இது தொடர்பில் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம்,

துப்பாக்கி தொடர்பான விடயம் பெரிய விடயம் அல்ல. இதனை நான் அலட்டிக் கொள்வில்லை. உறுப்பினர் ஒருவருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கமாயின் முறைப்பாடியான விண்பத்தை வைத்து துப்பாக்கியைப் பெற்றுக்கொள்ளமுடியும். இது சட்டரீதியானது. சபையில் பேச வேண்டிய விடயங்கள் எத்தினையோ இருக்க இதைப் பேசுவது முறையா? மாகாண சபையில் பேசப்படுகின்ற விடயங்கள் தொடர்பில் யாரும் எங்கும் கேள்விக்கு உட்படுத்த முடியாது. குறிப்பாக 1987 ஆம் ஆண்டு 42 ஆம் இலக்க மாகாண சபைச் சட்டத்தில் 9/2 பிரிவுக்கு அமைய மாகாண சபையில் பேசப்பட்ட விடையம் தொடர்பில் நீதிமன்றததிலே எங்கையுமே கேள்விக்குட்படுத்த முடியாது. அவ்வாறு யாரும் முறைப்பாடு செய்திருந்தால் குறித்த விடயத்தை பொலிஸாருக்குத் தெரிவியுங்கள் எனத் தெரிவித்தார்.

வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் தவநாதன் கருத்துத் தெரிவிக்கையில்,

எல்லோரும் கூறுவது போன்று இந்த உயரிய சபையில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த 2 உறுப்பினர்களில் ஒருவர் முழுப் பொய்யைச் சொல்லுகின்றார். இதனை இன்றே தீர்த்துவைக்க வேண்டும். கட்சிகள் கூறுவதுபோன்று ஆளுங்கட்சிக்குள்ளேயே உள்ள இருவரில் ஒருவர் பொய்யைச் சொல்கின்றார். இதந்தப் பொய்யைச் சொல்கின்றவர் யார் இதனை தெளிவுபடுத்த வேண்டும். மக்கள் தற்போதுதான் இந்த பய பீதிகளை மறந்து இருக்கின்ற நிலையில், மீண்டும் ஒரு பயத்தை ஏற்படுத்துகின்றோம். இந்த அவையில் யார் பொய்சொல்கிறார்கள் என்பதை தீர்மானிக்க வேண்டும் என்றார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top