தென் ஆப்பிரிக்காவில் புல்வெளியில் விழுந்து நொறுங்கியது விமானம்- 19 பேர் காயம்..

தென் ஆப்பிரிக்காவில் விமானம் புல்வெளியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 19 பேர் காயமடைந்தனர்.
தென் ஆப்பிரிக்காவின் பிரிட்டோரியா நகரில் பயணிகளை ஏற்றி வந்த சிறுரக விமானம், ஒண்டர்பூம் விமான நிலையம் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்தது. விமானத்தை அவசரமாக தரையிறக்குவதற்கான முயற்சியில் விமானி ஈடுபட்டார். எனினும் விமானம் அருகில் உள்ள புல்வெளியில் விழுந்து நொறுங்கியது.
மிதமான வேகத்தில் தரையில் விழுந்ததால் விமானத்தின் என்ஜின் பகுதி மற்றும் வால் பகுதி நொறுங்கியது. விமானத்தில் இருந்து கரும்புகை எழுந்தது. இதுபற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து, மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 19 பேர் காயமடைந்தனர். அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
விபத்து நடந்த பகுதியில் விமானத்தின் முக்கிய பாகங்கள் சிதறிக் கிடந்ததாகவும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். என்ஜின் கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.