தெலுங்கானாவில் கோர சம்பவம், பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து; 11 பேர் உடல் கருகி சாவு

தெலுங்கானாவில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உடல் கருகி பலியாகினர்.
தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள கோட்டிலங்காலா என்கிற இடத்தில் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வந்தது.
இங்கு நேற்று காலை 25 தொழிலாளர்கள் பட்டாசுகள் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சற்றும் எதிர்பாராதவிதமாக அங்கு தீப்பிடித்தது. கண்இமைக்கும் நேரத்தில் தீ மளமளவென பரவியதால் அங்கிருந்த பட்டாசுகள் அனைத்தும் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின.
இதனால் பதறிப்போன தொழிலாளர்கள் உயிரைக்காப்பாற்றிக் கொள்ள நாலாபுறமும் சிதறி ஓடினர். இருப்பினும் தீயின் கோரப்பிடியில் சிக்கி 11 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிர் இழந்தனர்.
மேலும் 5 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர். பட்டாசுகள் வெடித்து சிதறியதில் தொழிற்சாலைக்கு அருகில் உள்ள சில வீடுகள் பலத்த சேதம் அடைந்தன.
சம்பவம் தொடர்பாக ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள முதல்-மந்திரி சந்திரசேகர ராவ், தீ விபத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.