பறக்கும் விமானத்தில் சாப்பாட்டிற்காக அடித்துக் கொண்ட விமானிகள்: பயத்தில் தவித்த பயணிகள்!!

ஈராக் விமான சேவை நிறுவனத்தில் பணிபுரியும் இரண்டு விமானிகள் பறக்கும் விமானத்தில் சாப்பாட்டு தட்டிற்காக சண்டை போட்டுக்கொண்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட நிர்வாகம் இருவரையும் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. ஈரானின் மாஷாத் நகரில் இருந்து ஈராக் தலைநகர் பாக்தாதுக்கு 157 பயணிகளுடன் புறப்பட்டு சென்றுள்ளது குறித்த விமானம்.
அப்போது துணை விமானி தமக்கான உணவை விமான பணிப்பெண் ஒருவரிடம் எடுத்து வர பணித்துள்ளார். ஆனால் விமானியோ அதை தடுத்து நிறுத்தியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பு வரையில் சென்றுள்ளது. மட்டுமின்றி விமானியே தமது உணவை தாமே எடுத்து சாப்பிட்டதாகவும், ஆனால் துணை விமானி பணிப்பெண்ணிடம் எடுத்து வர பணித்ததும் விமானி அதை தடுத்ததாகவும் கூறப்படுகிறது.
விமானம் பாக்தாத் நகரில் பத்திரமாக தரையிறங்கிய பின்னரும் இரு விமானிகளும் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே இந்த விவகாரம் தொடர்பில் போக்குவரத்து அமைச்சகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், தற்போது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள விமானிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. மட்டுமின்றி குறித்த விமானிகள் இருவருக்கும் வாழ்நாள் தடை விதிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.