பாகிஸ்தானில் வாக்குச்சாவடி அருகே குண்டுவெடிப்பு 33 பேர் பலி!!

பாகிஸ்தானில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், வன்முறை தாக்குதல்களில் 33 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
:பாகிஸ்தானில் பாராளுமன்றம் மற்றும் 4 மாகாண சட்டசபைகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. வாக்காளர்கள் எந்தவித அச்சமும் இன்றி வாக்களிக்க ஏதுவாக, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் போலீஸ் மற்றும் ராணுவ வீரர்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர். வாக்குச்சாவடிக்கு வரும் அனைவரும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டனர். என்னும் ஒரு சில பகுதிகளில் வன்முறை மற்றும் தாக்குதல் நடைபெற்றது தேர்தல் அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவில் வாக்குச்சாவடி அருகே போலீஸ் வாகனத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் 5 போலீஸ்காரர்கள் உள்பட 33 பேர் கொல்லப்பட்டனர்.
கைபர் பாக்துன்க்வா மாகாணம் சிவாபி மாவட்டத்தில் வாக்குச்சாவடிக்கு வெளியே அவாமி நேசனல் கட்சி மற்றும் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹரீக் இ இன்சாப் கட்சி ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் இம்ரான் கான் கட்சி தொண்டர் ஒருவர் கொல்லப்பட்டார். 2 பேர் காயமடைந்தனர். மிர்புர்காஸ் வாக்குச்சாவடிக்கு வெளியே நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். லர்கானா பகுதியில் உள்ள அரசியல் கட்சி முகாமில் பட்டாசு வெடித்தபோது 4 பேர் காயமடைந்தனர்.
தேர்தல் நாளான இன்று மதியம் வரை நடந்த வன்முறைத் தாக்குதல்களில் 33 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 36 பேர் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.