பிரான்ஸ்சில் வானவேடிக்கையின் போது, கால்பந்து ரசிகர்களால் ரணகளமான சம்பவம்- 30 பேர் காயம்!

பிரான்ஸ்- பெல்ஜியம் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற கால்பந்து அரையிறுதி போட்டியின் போது, பிரான்ஸ் ரசிகர்கள் சிலர் பட்டாசு வெடித்ததை துப்பாக்கி சூடு என நினைத்து பொதுமக்கள் அலறியடித்து ஓடியதில் 30 பேர் காயமடைந்தனர். ரஷ்யாவில் வெகுவிமரிசையாக நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டி, தற்போது விறுவிறுப்பான உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் பிரான்ஸ்- பெல்ஜியம் அணிகள் மோதின.
இதில் சிறப்பாக விளையாடிய பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது. போட்டி முடிவதற்கு இரண்டு நிமிடங்களுக்கு முன்னதாகவே, உற்சாக மிகுதியில் இருந்த பிரான்ஸ் அணி ரசிகர்கள் தங்களது வெற்றியை கொண்டாட ஆரம்பித்து விட்டனர். தெருக்களில் பட்டசுகளை வெடித்து ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அதே வேளையில், பிரான்சின் நைஸ் நகரில் உள்ள Cours Saleya பகுதியில் ரசிகர்கள் சிலர் பட்டாசு வெடித்ததை துப்பாக்கி சூடு என நினைத்து பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்துள்ளனர்.
சம்மந்தப்பட்ட தெருவில் 1000க்கும் அதிகமான பொதுமக்கள் குழுமியிருந்ததால், ஏராளமானோர் நெரிசலில் சிக்கி காயமடைந்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், ரசிகர்களை அப்புறப்படுத்தியதோடு, காயமடைந்த 30க்கும் மேற்பட்ட பொதுமக்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முன்னதாக நைஸ் பகுதியில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 86 பேர் பலியாகியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.