News

புதிய அரசமைப்புக்கான நகலை இறுதி செய்வது பற்றி மைத்திரி – ரணில் – சம்பந்தன் ஓரிரு நாட்களில் கூடி ஆராய்வு.

உத்தேச புதிய அரசமைப்பு நகலை இறுதி செய்வது குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர்
இந்த வாரத்தில், அடுத்து வரும் தினங்களில் ஒருநாளில் சந்திக்கவுள்ளனர் என விடயமறிந்த
வட்டாரங்கள் தகவல் வெளியிட்டன.

இந்தச் சந்திப்பில் அரசமைப்பு உருவாக்க விடயங்களைக் கையாளும் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் எம்.பியான ஜயம்பதி விக்கிரமரட்ன மற்றும் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. ஆகியோரும் பங்குபற்றுவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
புதிய அரசமைப்புக்கான வழிகாட்டல் குழு முன்வைத்த இடைக்கால அறிக்கையின் மீது அரசமைப்புப் பேரவையாகக் கூடிய நாடாளுமன்றம் மிக விரிவான விவாதத்தை நடத்தியிருந்தது.
அங்கு கட்சிப் பிரநிதிகள் முன்வைத்திருந்த பல்வேறு கருத்துக்களையும் உள்வாங்கி அவற்றின் அடிப்படையில் புதிய அரசமைப்பு நகல் வடிவத்துக்கான ஆவணம் ஒன்றை நிபுணர் குழு தயாரித்துள்ளது.
அதுவே இவ்வாரம் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படவிருக்கின்றது. அது ஜனாதிபதியின் பரிசீலனைக்குக் கிடைத்ததும் பிரதமரும், எதிர்க்கட்சித் தலைவரும் அது குறித்து ஜனாதிபதியை நேரில் சந்தித்துக் கலந்துரையாடுவர்.
அரசமைப்பு நகலுக்கான ஆவணத்துக்கு ஜனாதிபதியின் அங்கீகாரம் – பச்சைக்கொடி சமிக்ஞை கிடைக்குமானால், இந்த மாதம் மூன்றாம் வாரத்தில் நாடாளுமன்றம் கூடும் சமயத்தில் மீண்டும் வழிகாட்டல்
குழுவின் கூட்டத்தை அழைக்கவும், அங்கு இந்த ஆவணத்தைச் சமர்ப்பித்து அதனை புதிய அரசமைப்புக்கான நகல் வடிவமாக ஏற்று, அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தொடரவும் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அறியவருகின்றது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top