புத்த பிக்குகளாக மாறவிருக்கும் தாய்லாந்து குகை சிறுவர்கள்!

தாய்லாந்தில் பெருவெள்ளம் காரணமாக குகைக்குள் சிக்கித்தவித்த 11 சிறுவர் கால்பந்தாட்ட வீரர்களும் 9 நாட்களுக்கு புத்த பிக்குகளாக மாற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த சிறுவர்கள் அனைவரும் குகைக்குள் சிக்கித்தவித்த நாட்களில் அவர்களது பெற்றோர்கள் இந்த வேண்டுதலை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. செவ்வாய் அன்று நடந்த சிறப்பு வழிபாடுகளின் முடிவில் குறித்த சிறுவர்கள் அனைவரும் புத்த பிக்குகளாக திருநிலைப்படுத்தப்பட்டனர்.
குறித்த நிகழ்வனது உலகெங்கிலும் உள்ள மக்கள் கண்டுகளிக்கும் பொருட்டு சமூக வலைதளத்தில் நேரலை செய்யப்பட்டுள்ளது. மட்டுமின்றி செவ்வாய் முதல் 9 நாட்கள் குறித்த சிறுவர்கள் அனைவரும் புத்த கோவிலில் தங்கியிருக்க உள்ளனர். பெருவெள்ளத்தின்போது குகைக்குள் சிக்கிய சிறுவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டால் அவர்களை 9 நாட்கள் புத்த பிக்குகள் போன்று வழிபாடுகளில் ஈடுபடுத்துவதாக பெற்றோர்கள் வேண்டிக் கொண்டதன்பொருட்டே தற்போது சிறுவர்களை அனுப்பியுள்ளனர்.
தாய்லாந்தில் உள்ள 90 சதவிகித மக்களும் புத்த மதத்தை பின்பற்றுகின்றனர். மீட்கப்பட்ட சிறுவர்களில் ஒருவர் மட்டும் கிறிஸ்தவர் என்பதால் எஞ்சிய அனைவரும் குறித்த வழிபாடுகளில் கலந்து கொண்டுள்ளனர். குகைக்குள் சிக்கிய சிறுவர்களை மீட்க உலகெங்கிலும் இருந்து தன்னர்வலர்களும் நிபுணர்களும் கலந்து கொண்டனர். கடைசி நபரை ஜூலை 10 ஆம் திகதி மீட்டனர். இதனையடுத்து அவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்ப்பித்தனர். கடந்த வாரம் மருத்துவமனையில் இருந்து குடியிருப்புகளுக்கு திரும்பிய சிறுவர்கள், குடும்பத்தாருடன் நேரம் செலவிட்டு வருகின்றனர்.