மகிந்த அணியினர் கேட்பதற்காக வடக்குத் தேர்தலை நடத்த முடியாது!

“வடக்கு மாகாண சபைக்கு முதலில் தேர்தல் நடத்த வேண்டும் என்று மஹிந்த அணி கோருவதற்காக வடக்குக்கு மாத்திரம் தனியாகத் தேர்தல் நடத்த முடியாது. வடக்கு மாகாண சபைத் தேர்தலை முதலில் நடத்துவதா என்பதனை தேர்தல் ஆணைக்குழுவே தீர்மானிக்க வேண்டும்.”– இவ்வாறு சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
‘‘தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வாகவே மாகாண சபைத் தேர்தல் முறைமை உருவாக்கப்பட்டது. வடக்கு மகாண தேர்தலையே முதலில் நடத்த வேண்டும்’’ என்று மஹிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:-
“வடக்கு மாகாண சபைக்கு முதலில் தேர்தல் நடத்த வேண்டும் என்று மஹிந்த அணி கூறுகின்றது. வடக்குக்கு மாத்திரம் தனியாகத் தேர்தல் நடத்த முடியாது. அனைத்து மாகாண சபைகளையும் ஒன்றிணைத்து தேர்தல் நடத்த வேண்டும் என்பதே அரசின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்தநிலையில், வடக்கு மாகாண சபைக்கு மாத்திரம் தனியாக தேர்தல் நடத்த முடியாது. வடக்கு மாகாண சபைத் தேர்தலை முதலில் நடத்துவதா என்பதனை தேர்தல் ஆணைக்குழுவே தீர்மானிக்க வேண்டும். அரசு அது தொடர்பில் தீர்மானிக்க முடியாது” – என்று தெரிவித்துள்ளார்.