மன்னாரில் அகழப்படும் மனித எலும்புகள்! கனேடியத் தூதர் திடீர் விஜயம்..

மன்னார் மாவட்டத்துக்கு நேற்றுச் சென்ற கனேடியத் தூதர், மாவட்டச் செயலரைச் சந்தித்து மாவட்டத்தின் தற்போதைய நிலமை தொடர்பில் கேட்டறிந்துகொண்டார். மன்னார் மாவட்டத்துக்கு மாவட்டச் செயலராக மோகன்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். அவரைச் சந்தித்து நிலமைகளைக் கேட்டறிந்தார். குறிப்பாக மாவட்டத்தில் எதிர்கொள்ளும் நெருக்கடி, அதற்காக மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பிலும் தற்போது ஒரு மாதத்துக்கும் மேலாக திருக்கேதீஸ்வரம் பகுதியில் தோண்டப்படும் எலும்புக்கூடுகள் தொடர்பிலும் வினவியுள்ளார்.
இவற்றுக்குப் பதிலளித்த மாவட்டச் செயலர், தற்போது மன்னாரில் மட்டுமன்றி வடக்கில் முக்கிய பிரச்சினையாகக் காணப்படுவது போதைப்பொருள் ஊடுருவலும் அதன் பாவனையும். அவற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளவேண்டியுள்ளது. அடுத்த மிக முக்கிய பிரச்சினை எமது இளையோருக்கான வேலைவாய்ப்பு இன்மை. இளையோரின் அதிக விரக்திக்கு இதுவே காரணமாகவுள்ளது. எனவே இளையோருக்கு வேலை வாய்பை ஏற்படுத்தக்கூடியதான தொழில் நிறுவனங் கள் நடுத்தர முதலீடுகளுக்கு முன்வர வேண்டும் – என்று பதிலளித்தார்.