மன்னார் மனித புதைகுழியில் மேலும் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு!!

F
மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள பழைய கூட்டுறவு விற்பனை நிலைய வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் அகழ்வு பணிகள் (13- 7 -2018) வெள்ளிகிழமை 33 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மன்னார் நீதவான் ரி.ஜே. பிராபாகரன் மேற்பார்வையில் இடம்பெற்று வருகின்ற அகழ்வு பணிகளின் போது விசேட சட்ட வைத்திய நிபுணர் டபிள்யூ.ஆர்.ஏ.எஸ். ராஜபக்ஷ தலைமை தாங்கி வருகின்றார்.
அவருடன் இணைந்து களனி பல்கலைக்கழகத்தின் போசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் அவரின் குழுவினரும் இணைந்து அகழ்வு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.மேற்படி மனித புதைகுழி அகழ்வு பணிகள் தற்போது விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதுவரை குறித்த வளாகத்தின் மையப்பகுதி மற்றும் நுழைவு பகுதிகளில் மாத்திரம் அகழ்வு பணிகள் இடம்பெற்று வந்த போதும் தற்போது நுழைவு பகுதியின் முன் காணப்படும் பகுதியிலும் அகழ்வுபணிகள் இடம்பெற்றது.
இன்று வெள்ளிக்கிழமை (13) அதனை அகழும் பணிகள் இடம்பெற்ற போது மேலும் மனித எச்சங்கள் மற்றும் மண்டையோடுகள் மீட்கப்படுள்ளன.
தற்போது குறித்த மனித புதைகுழியில் ஒரு பகுதி அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, மறு பகுதியில் இது வரை அகழ்வு மேற்கொண்ட போது கிடைத்த பகுதியளவிலானதும் முழு அளவிலானதுமான மனித எச்சங்களை மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில் இன்று 33 ஆவது தடவையாக அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதும், இது வரை 27 மனித எச்சங்கள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக விசேட சட்ட வைத்திய நிபுணர் டபிள்யூ.ஆர்.ஏ.எஸ். ராஜபக்ஷ தெரிவித்தார்.
அத்துடன் குறித்த புதைகுழியில் மோதிர வடிவிலான வட்ட வடிவிலான தடயப் பொருளொன்றும் மீட்கப்பட்டுள்ளதாகவும், குறித்த தடயப் பொருளை அடையாளப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் எனவே குறித்த அகழ்வு பணி நிறைவடையும் வரை குறித்த பொருள் குறித்து கூற முடியாது எனவும் தெரிவித்தார்.
குறித்த பணிகள் மீண்டும் எதிர்வரும் திங்கட்கிழமை (16) இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.