மர்ம நபரால் ஜேர்மனியின் மூனிச் நகரில் 200 விமானங்கள் ரத்து !

ஜேர்மனியின் மூனிச் விமான நிலையத்தில் 200 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் உள்ள முக்கியமான நகரங்களில் ஒன்று மூனிச். இந்நகரில் உள்ள விமான நிலையத்தின் பாதுகாப்பு பகுதியில், அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் நுழைந்ததாக பொலிசாருக்கு தகவல் வந்தது. அதனைத் தொடர்ந்து, மூனிச் விமான நிலையத்தின் இரண்டு முனையங்களிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது.
ஆனால், பொலிசாரின் சோதனையில் சிக்காமல் பெண்ணொருவர் குறித்த முனையங்களில் இருந்து தப்பி வெளியேறியது பின்னர் தெரிய வந்தது. அப்பெண் மிகவும் ஆபத்தானவராக இருப்பார் என பொலிசார் சந்தேகமடைந்தனர். இதன் காரணமாக, மூனிச் விமான நிலையத்திற்கு வரும் விமானங்கள் மற்றும் அங்கிருந்து செல்லும் விமானங்கள் என மொத்தமாக 200 விமானங்கள் பாதுகாப்பு கருதி ரத்து செய்யப்பட்டன.
இதனால் வாரயிறுதியில் பயணம் செய்ய காத்திருந்த ஆயிரக்கணக்கான பயணிகள் புறப்பாடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். ஏற்கனவே 60 விமானங்கள் மூனிச் விமான நிலையத்திற்கு தாமதமானது குறிப்பிடத்தக்கது.