முதலமைச்சர் வேட்பாளராக கட்சி யாரை நிறுத்தினாலும் இணங்குவோம்! – சுமந்திரன்.

வடக்கு மாகாண சபை தேர்தலில் யார் முதலமைச்சர் வேட்பாளர் என்பதை கட்சி இன்னமும் தீர்மானிக்கவில்லை. அவ்வாறு கட்சி யாரை தீர்மானிக்கிறதோ, அதற்கு நாங்கள் இணங்குவோம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
2013ம் ஆண்டு மாகாணசபை தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவை கட்சி முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த தீர்மானித்திருந்தது.ஆனால் பின்னர் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வேறு ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவதற்கு தீர்மானித்து சீ.வி.விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தினார்.
தமிழ் மக்களுக்காகவும், தமிழ் மக்களுடைய உரிமைகளுக்காகவும் பல தியாகங்களை செய்திருந்த மாவை சேனாதிராஜா அப்போதும் தனக்கு கிடைக்க வேண்டி பதவியை தியாகம் செய்து சீ.வி.விக்னேஸ்வரனை முதலமைச்சராக்க இணங்கினார். அவ்வாறான தியாகத்தை எல்லோரும் செய்யவேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
அடுத்துவரும் வடமாகாணசபை தேர்தலில் மாவை சேனாதிராஜாவை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என நான் கூறியிருந்தது கட்சியின் தீர்மானம் அல்ல.கட்சியின் பேச்சாளர் என்ற வகையிலும், கட்சியின் நிலைப்பாடுகளை ஓரளவுக்கு புரிந்து கொண்டதன் அடிப்படையிலும் என்னுடைய தனிப்பட்ட கருத்தாகவே அதனை கூறியிருந்தேன். மற்றபடி அடுத்த மாகாண சபை தேர்தலில் யார் முதலமைச்சர் வேட்பாளர் என்பதை கட்சி இன்னமும் தீர்மானிக்கவில்லை. அவ்வாறு கட்சி யாரை தீர்மானிக்கிறதோ, அதற்கு நாங்கள் இணங்குவோம்.
மேலும் சீ.வி.விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த கூடாது என்பதற்கு காரணங்கள் இருக்கின்றன. முதலமைச்சர் சீ. வி.விக்னேஸ்வரன் வடமாகாண சபையால் செய்ய கூடிய விடயங்களை கூட செய்யவில்லை. கட்சிக்கு விசுவாசமற்ற முறையில் செயற்பட்டமை, தேர்தல் காலங்களில் கட்சியின் நிலைப்பாடுகளுக்கு எதிராக செயற்பட்டமை இப்படி பல குற்றச்சாட்டுக்கள் என்னிடம் உள்ளன. ஆகவே அவர் அடுத்த முறை மாகாண சபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்படக் கூடாது என்பது என்னுடைய கருத்து என்றார்.