News

வடக்கு மாகாண அமைச்சர் சபையைப் பரிந்துரைப்பதற்குத் தனக்கு அதிகாரமில்லை- விக்கி கடிதம்!

வடக்கு அமைச்சர் சபையை பரிந்துரைக்கும் அதிகாரம் இல்லை என விக்கி கடிதம்! – இருக்கின்றது என்று சி.வி.கே. விளக்கம்
வடக்கு மாகாண அமைச்சர் சபையைப் பரிந்துரைப்பதற்குத் தனக்கு அதிகாரமில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவைத் தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
“நீதிமன்றத் தீர்ப்பின் ஊடாக அதிகாரம் பறிக்கப்படவில்லை. அந்த அதிகாரம் முதலமைச்சரிடமே தொடர்ந்து இருக்கின்றது” என்று அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், முதலமைச்சருக்கு பதில் அனுப்பியுள்ளார். அதன் பிரதியை வடக்கு ஆளுநருக்கும் அனுப்பியுள்ளார்.
வடக்கு மாகாணசபையின் விசேட அமர்வு கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. வடக்கு மாகாணத்துக்கு முழுமையான அமைச்சர் சபையை முதலமைச்சர் நியமிக்கவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானம் உடனடியாகவே முதலமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்தக் கடிதத்துக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பதில் அனுப்பியுள்ளார். மேன்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பின் ஊடாக, அமைச்சர் சபையைப் பரிந்துரைப்பதற்கு தனக்கு அதிகாரம் இல்லை என்று அந்தப் பதிலில் குறிப்பிட்டுள்ளார்.
முதலமைச்சரின் கடிதத்துக்கு அவைத் தலைவர் உடனேயே பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.
“தங்களால் குறிப்பிடப்படும் நீதிமன்றத் தீர்ப்பின் 16ஆம் பக்கக் கருத்துத் தெளிவானதே. ஒரு மாகாண சபை அமைச்சரின் நியமனம் மற்றும் நீக்கம் என்பன ஆளுநராலேயே நிறைவேற்றப்பட வேண்டும் என்பதும் அந்தக் கடமைகளை ஆளுநர், முதலமைச்சரின் ஆலோசனையின் பேரிலேயே நிறைவேற்றலாம் என்பதும் தெளிவு.
நியமன அதிகாரம் ஆளுநரிடமும், ஆலோசனை வழங்கும் பொறுப்பு முதலமைச்சரிடமும் உள்ளது என்பது தெளிவானது.
முதலமைச்சரின் ஆலோசனை கட்டாயம் என்பதும் தெளிவானது. எனவே முதலமைச்சருக்கு நியமனம், பதவிநீக்கம் தொடர்பாகவுள்ள ஆலோசனை அதிகாரம் வலியுறுத்தப்பட்டுள்ளதே தவிர எதுவித அதிகாரமும் இல்லையென்று கூறப்படவில்லை என்பதே எனது கருத்தாகும் என்பதனை அன்புடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அது மட்டுமல்ல நீதிமன்றக் கட்டளையின் பிரகாரம், முறைப்பாட்டாளரை சட்டபூர்வமாக நீக்கும் அதிகாரத்தை இந்த இடைக்கால நிவாரணம் பாதிக்காது என்பது கவனிக்கத்தக்கது.
எனவே, முதலமைச்சருக்கு சட்டத்தால் உரித்தாக்கப்பட்ட அதிகாரங்கள், பொறுப்புக்கள் எதையும் நீதிமன்றம் மறுதலிக்கவில்லை என்பதும் சட்டப்படி தாங்கள் இப்பொழுதும் செயற்படலாம் என்பது எமது கருத்தாகும்” என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், மேன்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பை திரிபுபடுத்திக் கூறுகின்றார் என்று சபையின் விசேட அமர்வில் உறுப்பினர்களால் சுட்டிக்காட்டப்பட்டது. இந்த அமர்வில் முதலமைச்சரும் அமைச்சர்களும் பங்கேற்கவில்லை.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top