வடக்கு முதல்வர் மற்றும் விஜயகலா எம்.பி ஆகியோரின் இணைவில் புதிய கட்சி.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனும், வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனும் இணைந்து புதிய அரசியல் கட்சியொன்றை தொடங்கவுள்ளதாக வார இறுதி கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த விஜயகலா புதிய அரசியல் கட்சியொன்றை ஆரம்பிப்பதற்கான முனைப்புக்களில் ஈடுபட்டு வருவதாக வடக்கு அரசியல் வட்டாரத் தகவல்களை ஆதாரம் காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
புதிய அரசியல் கட்சி அமைப்பது குறித்து விஜயகலா, விக்னேஸ்வரனுடன் பல சுற்று இரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை தமிழ்த் தேசிய முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன், மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்டவர்களுடனும் விஜயகலா பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.
அதற்கு முன்னதாக லண்டனின் புலம்பெயர் தமிழர்களுடன் விஜயகலா சந்திப்பு நடத்த உள்ளார்.
மேலும், விஜயகலாவின் கருத்து தொடர்பில் தெற்கு அரசியல் கட்சிகள் வெளியிட்ட கடுமையான நிலைப்பாடு பற்றி பொதுநலவாய நாடுகள் நாடாளுமன்றில் முறைப்பாடு செய்யவும் விஜயகலா முயற்சித்து வருவதாக அந்த ஊடகத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.