வடக்கு வீடமைப்பு தொடர்பில் ஒன்றுகூட்டித் தீர்மானியுங்கள்! – ரணிலுக்கு மைத்திரி ஆலோசனை

வடக்கில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடுகளை அமைப்பது தொடர்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்தியத் தூதுவர் மற்றும் சம்பந்தப்பட்ட அரச அமைச்சர்களை அழைத்து கலந்துரையாடி தீர்வை பெறுங்கள் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று அமைச்சரவைக்கூட்டம் நடைபெற்றது. அதில் வடக்கில் வீடுகளை அமைக்கும் விடயத்தில் அமைச்சர்களுக்குள் எழுந்த முரண்பாடுகளை அடுத்து ஜனாதிபதி இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.
அமைச்சரவைக் கூட்டத்தின் போது வடக்கில் 40 ஆயிரம் வீடுகளை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை சீன நிறுவனத்துக்கு வழங்குவதற்கான தனது யோசனையை அமைச்சர் சுவாமிநாதன் சமர்ப்பித்துள்ளார். 40 ஆயிரம் வீடுகளை அமைக்கும் பொறுப்பை சீன நிறுவனத்திடம் கையளித்தால் இந்தியாவின் எதிர்ப்பைச் சம்பாதிக்கவேண்டிவரும். இந்த விடயம் தொடர்பில் மீள் பரிசீலனை செய்வது நல்லது என்று அமைச்சர் சாகல ரத்னாயக்க வலியுறுத்தியுள்ளார்.
இந்த வீடுகளை தலா 12 இலட்சம் ரூபா செலவில் அமைத்துத் தருவதற்கு சீன நிறுவனம் இணங்கியுள்ளது. அதற்கு இணக்கத்தைத் தெரிவிப்பது நல்லது என்று அமைச்சர் சுவாமிநாதன் விளக்கியுள்ளார்.
வடக்குக்கான வீடமைப்பு திட்டம் தொடர்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்தியத் தூதுவர் , சம்பந்தப்பட்ட அமைச்சர்களை ஒன்றுகூட்டி கலந்துரையாடி விரைவில் தீர்மானம் ஒன்றை எடுங்கள் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.