வரலாறு காணாத வெயிலில் தவிக்கும் ஜேர்மனி!

ஜேர்மனி நாடு மழைப்பொழிவு இல்லாததால் வரலாறு காணாத வெயிலில் தவித்து வருகிறது. ஜேர்மனியின் வடகிழக்கு பகுதிகளில் சமீப காலமாக மழைப்பொழிவு இல்லை. வழக்கமான அளவில் பாதி தான் அங்கு மழைப் பொழிந்துள்ளது. அதாவது வெறும் 50 மி.மீட்டர் மழை மட்டுமே பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜேர்மனியின் தட்ப வெப்பநிலையால் நிலங்கள் வறண்டும், காட்டுத்தீ ஏற்பட்டும் உள்ளது. மேலும், காட்டுத்தீயின் அபாயமும் மிக அதிகமாக உள்ளதால், சுமார் 100 இடங்களில் தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, சாக்சோனி-ஆன்ஹால்ட் பகுதியில் ஏற்பட்ட தீயை அணைக்க தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதால், தீயணைப்பு வீரர்கள் நீச்சல்குளங்கள் உள்ளிட்ட இடங்களில் இருந்து தண்ணீரை பயன்படுத்தினர்.
வெப்பத்தின் தாக்கத்தால் விவசாயிகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக, சப்பாத்திக் கள்ளிகள் நிலங்களை ஆக்கிரமித்துக் கொள்ள தொடங்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே, மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுமாறு ஜேர்மனிய நகரங்கள் மக்களை கேட்டுக் கொண்டுள்ளன.