விஜயகலாவின் உரை – முதலமைச்சர், எம்.பிக்கள், ஊடகவியலாளர்களிடம் சிஐடியினர் விசாரணை!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நிகழ்த்திய உரை தொடர்பாக, வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் ஜூலை 02 ஆம் திகதி நடந்த நிகழ்வில், உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், “தமிழீழ விடுதலைப்புலிகள் மீள உருவாக வேண்டும்” எனக் கூறியிருந்தார். அந்த உரைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அவர் இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து விலக நேரிட்டது.
இந்த நிலையில், இந்த உரை தொடர்பாக விசாரணை நடத்தி வரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர், அந்த நிகழ்வில் பங்கேற்ற முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் இன்று வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுள்ளனர். முதலமைச்சரின் இல்லத்தில் சுமார் ஒன்றரை மணிநேரம் இந்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர்களான எம். சுமந்திரன், மாவை சேனாதிராஜா, ஈ.,சரவணபவன் உட்பட யாழ்ப்பாணம் பொலிஸ் உத்தியோகத்தர்கள், மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்டோரிடமும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
ஊடகவியலாளர்கள் மற்றும் பொலிஸாருக்கான விசாரணைகள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. அரச அதிகாரிகளிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.