விஜயகலாவுக்கு நான் அப்பிடி செய்தேனா ? யார் சொன்னது ?

தன்னுடனான அலைபேசி உரையாடலை ஊடகங்களுக்கு வெளியிடுமாறு விஜயகலா மகேஸ்வரன் அந்த உரையாடலில் குறிப்பிட்டதாகப் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பேசிய விஜயகலா மகேஸ்வரன், விடுதலைப் புலிகளின் மீள்வருகை குறித்துக் கருத்து வெளியிட்டிருந்தார். இது தென்னிலங்கையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்தநிலையில், சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, செய்தியாளார்கள் முன்னிலையிலேயே விஜயகலாவுக்கு அலைபேசி அழைப்பு ஏற்படுத்திப்பேசியிருந்தார்.பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின் இந்தச் செயற்பாட்டுக்கு விஜயகலா மகேஸ்வரன் கவலை வெளியிட்டிருந்தார்.
“ஒரு பெண்ணுக்கு ரஞ்சன் துரோகம் செய்திருக்கின்றார். அதுவும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு எப்படி துரோகம் செய்திருக்கின்றார் என்பதையே இந்த உலகம் அறிந்திருக்கின்றது” என்று விஜயகலா மகேஸ்வரன் குறிப்பிட்டிருந்தார். இந்தநிலையில், குறித்த விடயம் தொடர்பில் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிடம் கொழும்பு ஊடகம் ஒன்று கேள்வியெழுப்பியுள்ளது. இதற்குப் பதிலளித்துப் பேசிய அவர்,
“தன்னுடனான தொலைபேசி உரையாடலை ஊடகங்களுக்கு வெளியிடுமாறு விஜயகலா மகேஸ்வரன் அந்த உரையாடலில் கூறியுள்ளார். அவருடனான அந்த உரையாடலை தர்மத்துக்கு முரணானது என்று ஒருபோதும் கூறமாட்டேன்.
அந்தச் சந்தர்ப்பத்தில் நான் ஒரு ஊடகவியலாளராகவே செயற்பட்டிருந்தேன். நான் மக்கள் முன்னிலையிலேயே அவரிடம் கேள்வி கேட்டிருந்தேன். சுமுகமாகவே அவருடன் பேசியிருந்தேன்.ஒருபோதும் அவருக்கு அவதூறு கூறவோ அல்லது அவரது மதிப்புக்குப் பங்கம் ஏற்படுத்தும் வகையில் நான் செயற்படவில்லை’’ – என்றார்.