விஜயகலாவை தேடிச் செல்லும் விசேட பொலிஸ் குழு .

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம், குற்ற விசாரணை பொலிஸாரினால் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளப்படவுள்ளது. விடுதலை புலிகள் அமைப்பு மீண்டும் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்று விஜயகலா முன்வைத்த கோரிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் எதிர்வரும் வாரம் விசேட பொலிஸ் குழுவொன்று அவரை தேடி செல்லவுள்ளதாக பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சபாநாயகரினால் சட்ட மா அதிபரிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைய, சட்ட மா அதிபரினால் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குற்ற விசாரணை பொலிஸாரினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் வைத்து விஜயகலா எம்.பி உரையாற்றிய போது, அந்த நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் வஜிர அபேவர்தன, வடமாகாண முதலமைச்சர் சீவி விக்னேஸ்வரன் உட்பட 20 பேரிடம் கடந்த வாரம் வாக்குமூலம் பெற்றுகொள்ளப்பட்டது.
விஜயகலா எம்.பியிடம் பெறப்படும் வாக்குமூலத்தையும் இணைத்து அனைத்து அறிக்கைகளும் ஒன்று சேர்த்து, பொதுவான அறிக்கை பொலிஸ் மா அதிபரிடம் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸ் மா அதிபரினால், சட்ட மா அதிபரிடம் அறிக்கை வழங்கப்பட்டு அவரால் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இது தொடர்பில் கட்சியாளர்களிடம் அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.