ஃபிபா உலகக்கிண்ணம் தொடரில் இங்கிலாந்து அணியின் காலிறுதி ஆட்டம் நடக்கும் அரங்கத்தின் அருகாமையில் பறக்கும் தட்டு ஒன்று தரையிறங்கி வெடித்துச் சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் ஃபிபா உலகக்கிண்ணம் கால்பந்து தொடர் மிக விமரிசையாக நடைபெற்று வருகிறது. முதல் சுற்று ஆட்டங்கள் அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில் காலிறுதி ஆட்டங்கள் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் ஸ்வீடன் அணியுடன் இங்கிலாந்து காலிறுதி ஆட்டத்தில் இன்று களமிறங்க உள்ளது. குறித்த ஆட்டம் நடைபெறும் அரங்கத்தில் இருந்து 80 மைல்கள் தொலைவில் பறக்கும் தட்டு ஒன்று தரையிறங்கி வெடித்துச் சிதறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தீப்பந்து வடிவத்தில் கண்ணைப்பறிக்கும் பொருள் ஒன்று Bostandyk கிராமம் அருகே வெடித்துச் சிதறியதாக பொதுமக்கள் பலர் தெரிவித்துள்ளனர். குறித்த பறக்கும் தட்டு விழுந்த பகுதியில் உள்ள மொத்த புல் மேடும் எரிந்து சாம்பலானதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
பறக்கும் தட்டு தரையிறங்கிய சில நொடிகளில் அப்பகுதியில் உள்ள மொபைல் இணைப்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டதாகவும், இடி தாக்கியது போன்ற பெருஞ்சத்தம் கேட்டதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்த பொதுமக்கள் சம்பவப்பகுதியில் இருந்து பூமியில் பாதியளவு புதைந்திருந்த வெள்ளி நிறத்தில் ஒரு பொருளை கண்டுபிடித்துள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த அதிகாரிகள், அது பறக்கும் தட்டா அல்லது வேறு ஏதும் பொருளா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.