டெனீஸ்வரன் வரவால், பதவியிழக்கப் போகும் அமைச்சர் யார்?

வடக்கு மாகாண அமைச்சரவையில் இருந்து மீன்பிடி மற்றும் போக்குவரத்து அமைச்சர் டெனீஸ்வரனைப் பதவி நீக்கியமைக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளமையை அடுத்து, அவர் தனது அமைச்சுப் பொறுப்புக்களை மேற்கொள்வதற்கு வசதியாக வடக்கு மாகாண சபையில் இருந்து ஒரு அமைச்சர் பதவி விலக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்துக்கு அமைவாக, மாகாண அமைச்சரவையில் ஆகக் கூடியது 5 பேர் மாத்திரமே பதவி வகிக்கலாம். ஏற்கனவே 5 பேர் பதவி வகிக்கின்றனர். சி.வி.விக்னேஸ்வரன், திருமதி அனந்தி சசிதரன், க.சிவநேசன், க.சர்வேஸ்வரன், ஜி.குணசீலன் ஆகியோர் உள்ளனர். நீதிமன்றத் தீர்ப்பினால் இவர்களில் ஒருவர் பதவி விலகவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. யார் அவர் என்கிற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
எனினும் நீதிமன்றத் தீர்ப்பு தனது கைகளுக்குக் கிடைத்த பின்னர் தான் அடுத்த கட்ட நடவடிக்கை என்று முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
டெனீஸ்வரன் அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பின்னர், அவர் வகித்த அமைச்சுப் பொறுப்புக்கள் முதலமைச்சர் உள்ளிட்ட இரண்டு அமைச்சர்கள் பங்கிட்டிருந்தனர். இதன் காரணமாக அவரது அமைச்சுப் பொறுப்புக்களை வகித்தவர்கள், ஆளுநர் முன்னபாக மீண்டும் பதவியேற்றுத் தமது பழைய அமைச்சுப் பொறுப்புக்களை தொடர வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.