$46 மில்லியன் லாட்டரியில் பரிசு விழுந்தும் வாங்க ஆளில்லை: பணம் என்ன ஆனது தெரியுமா?

கனடாவின் பல்வேறு பகுதிகளில் கடந்தாண்டு லாட்டரியில் விழுந்த $46 மில்லியன் அளவிலான பரிசுகளை யாருமே வாங்கி செல்லவில்லை என தெரியவந்துள்ளது. ஒன்றாறியோ, அல்பர்டா, குயூபெக், பிரிட்டீஸ் கொலம்பியா போன்ற இடங்களில் வசித்தவர்களே அதிகளவு லாட்டரியில் வென்ற பணத்தை வாங்காமல் இருந்துள்ளனர். பிரிட்டீஸ் கொலம்பியாவில் மட்டும் $7.4 மில்லியன் பணத்தை வாங்கி கொள்ள பரிசை வென்றவர்கள் வரவில்லை.ஒன்றாறியோவில் $21.8 மில்லியன் பணத்தை வாங்கி செல்ல ஆட்கள் வரவில்லை எனவும் தெரியவந்துள்ளது.
இது குறித்து ஒன்றாறியோ லாட்டரி கார்ப்பரேஷன் தலைவர் டிட்டா கூறுகையில், லாட்டரியில் வென்ற பரிசுகளை வாங்காமல் இருப்பவர்கள் பெரும்பாலும் டிக்கெட்களை எங்கு வைத்தோம் என மறந்திருக்கலாம், தொலைத்திருக்கலாம் அல்லது தவறுதலாக தூக்கி போட்டிருக்கலாம். லாட்டரியில் விழும் பரிசுகளை குலுக்கல் நடந்த 52 வாரங்களுக்குள் வாங்கி கொள்ளவேண்டும் என்பது விதியாகும். அப்படி வாங்காத பட்சத்தில் அந்த பரிசு தொகைகள் அடுத்து நடக்கும் சிறப்பு லாட்டரி குலுக்கல் பரிசு தொகையோடு சேர்க்கப்படும் என கூறியுள்ளார்.