அவுஸ்திரேலியாவில் இருந்து ஈழத்து அகதியான திலீபன் என்ற இளைஞர் நாடு கடத்தப்பட்டுள்ள நிலையில், குறித்த இளைஞரின் மனைவி வீதியில் கிடந்து கதறியழும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. அவுஸ்திரேலியாவில் மனைவியும் குழந்தையும் இருக்க, அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்ட நிலையில் இலங்கையரான திலீபன் ஞானேஸ்வரன் இன்று நாடு கடத்தப்பட்டார்.
2012ம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு அகதியாக சென்ற இலங்கை தமிழரான திலீபன் ஞானேஸ்வரன், தமது வீசா கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் நாடு கடத்தப்படும் அச்சத்தை எதிர்நோக்கியிருந்தார். இந்த நிலையில், சட்டவிரோதமான முறையில் இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியா சென்று நாடு கடத்தப்பட்ட 18 பேர் அடங்கிய குழுவினருடன் திலீபன் இன்று நாடு கடத்தப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞரை நாடு கடத்த வேண்டாம் என வலியுறுத்தி விலாவுட் தடுப்பு முகாமுக்கு முன்பாக திலீபனின் மனைவி உள்ளிட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது திலீபனின் மனைவி தனது கணவரை நாடு கடத்த வேண்டாம் என கோரி கைக்குழந்தையுடன் வீதியில் கிடந்து கதறியழுதுள்ளார். இது குறித்த காணொளி ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.