அகதிகளின் பராமரிப்பு செலவை கனேடிய அரசு வழங்கவேண்டும் ஒன்ராறியோ அரசு கோரிக்கை!

அகதிகளின் பாரமரிப்புக்காக செலவாகும் 200 மில்லியன் டொலர்களை கனேடிய மத்திய அரசாங்கம் வழங்கவேண்டும் என ஒன்ராறியோ மாநில அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த தகவலை ஒன்ராறியோவின் சிறுவர்கள் மற்றும் சமூக சேவைகள் அமைச்சர் தெரிவித்துள்ளார். இது குறித்து, சிறுவர்கள் மற்றும் சமூக சேவைகள் அமைச்சர் மேலும் கூறியதாவது, முறையற்ற எல்லை தாண்டுதல் நடவடிக்கைகள் மூலம் கனடாவுக்குள் நுழைந்து ஒன்ராறியோவில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளவர்களின் தேவைகளை நிறைவு செய்வதற்கே இந்த தொகை தேவையாக உள்ளது.
ஒன்ராறியோவிற்குள் பிரவேசித்துள்ள அகதிகளுக்காக ரொரன்ரோவில் அமைத்துக் கொடுக்கப்பட்ட தற்காலிக கூடாரங்களுக்காக 74 மில்லியன் டொலர்களும், சமூக உதவித் திட்டங்களுக்காக 90 மில்லியன் டொலர்களும், அகதிகளின் பிள்ளைகளின் பாடசாலை மற்றும் கல்வி உதவிச் செலவீனங்களுக்கா 20 மில்லியன் டொலர்களும் என, இதுவரை 200 மில்லியன் டொலர்கள் செலவாகியுள்ளது.
இவ்வாறான நிலையில் நாட்டிற்குள் வரும் அரசியல் புகழிடக் கோரிக்கையாளர்களின் தேவைகளை நிறைவு செய்வது மத்திய அரசின் கடமை என்பதே முதல்வர் டக் ஃபோர்ட் தலைமையிலான ஒன்ராறியோ மாநில அரசாங்கத்தின் நிலைப்பாடு. அகதிகளை உள்வாங்குதல் என்பது எம்மால் ஏற்படுத்தப்பட்ட ஒரு விடயம் அல்ல, மத்திய அரசினால் ஏற்படுத்தப்பட்ட இவ்வாறான ஒரு நிலைமைக்காக மாநில அரசாங்கம் செலவு செய்ய முடியாது“ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.